ஜனாதிபதித் தேர்தல் குறித்த பொது இணக்கப்பாட்டில் தமிழ்க் கட்சிகள் கைச்சாத்திட்டன! முரண்பட்டு வெளியேறியது முன்னணி !!

0

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய ஐந்து கட்சிகளும் கையொப்பமிட்டிருக்கின்றன.

ஏற்பாட்டாளர்களுடன் முரண்பட்டுக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்திலிருந்து வெளியேறியது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் யாழ். பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ‘ப்றைட் இன்’ விடுதியில் இன்று பிற்பகல் 2 மணி முதல் நடைபெற்றது.

சந்திப்பின் ஆரம்பம் முதல் பலமான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. சமஷ்டியா? ஒற்றையாட்சியா? என்பது குறித்து தங்களது நிலைப்பாட்டில் மாற்றமேதுமில்லை என்ற நிலைப்பாட்டுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடாப்பிடியாக நின்றது.

இடைக்கால அரசியலமைப்பை எதிர்ப்பதான பதம் உடன்படிக்கையில் இடம்பெற வேண்டும் என்ற முன்னணி அடம்பிடித்தது. ஏனைய ஐந்து கட்சிகளும் அதை எதிர்த்தன.

ஒரு கட்டத்தில் மாணவர்களைப் பார்த்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் “நீங்கள ஒரு நிரலுடன் இயங்குகிறீர்கள்” என்று கடுந்தொனியில் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் “ எங்களைப் பார்த்தால் சிறு பிள்ளைகளாகத் தெரிகிறதா? “ என்று கடிந்து கொண்டனர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிக்கும் இடையிலான வாக்குவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளில் சிலர் தாம் ஒப்பமிட்டு விட்டு போகப் போவதாகத் தெரிவித்தனர். அதன் பின் சல சலப்பு சற்று அடங்கியதுடன் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொருவராக ஆவணத்தில் ஒப்பமிட்டத் தொடங்கினர்.

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டனர்.