இலங்கையின் பென்டகனைத் திறந்து வைத்தார் மைத்திரி

0

பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் புதிய தலைமையகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் திறந்து வைத்தார்.

அனைத்து பாதுகாப்பு கட்டமைப்புகளையும் ஒரேயிடத்தில், செயற்பட வைக்கும் வகையில், பெலவத்த, அக்குரேகொடயில் 77 ஏக்கர் காணியில், “இலங்கையின் பென்டகன்” என வர்ணிக்கப்பட்ட, புதிய பாதுகாப்பு தலைமையகம் வளாகம் அமைக்கப்பட்டு வந்தது.

புதிய பாதுகாப்புத் தலைமையகத்தை அமைப்பதற்கான அடிக்கல் 2011ஆம் ஆண்டு நடப்பட்டது. அப்போது இதற்காக 54.3 பில்லியன் ரூபா செலவு ஏற்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது.

இலங்கை இராணுவத்துக்கென ஒதுக்கப்பட்ட 6ஆவது 7ஆவது தொகுதிகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து – இராணுவத்தின் புதிய தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

10 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத் தொகுதிகளில், இலங்கை இராணுவத்துக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான அறைகள், இரண்டு உலங்குவானூர்தி தரையிறங்கும் தளங்கள், இராணுவத்தினருக்கான தங்குமிட வசதிகள், வாகன தரிப்பிடங்கள், உணர்தர உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், மின்பிறப்பாக்கிகள், நீர்சேமிப்பு வசதிகள், நூலகங்கள், மற்றும் ஏனைய வசதிகளைக் கொண்டதாக இந்த இரண்டு கட்டடத் தொகுதிகளும் அமைந்துள்ளன.

சுமார் 4000 இராணுவ அதிகாரிகள் பணியாற்றுவதற்கான பணியக அறைகள் இதில் உள்ளன.

அதேவேளை, அனைத்துக் கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும், பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் செயலகம், கடற்படை, விமானப்படை, தலைமையகங்களும் இந்த வளாகத்துக்கு மாற்றப்படவுள்ளன.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் நடந்த நிகழ்வில், மரியாதை வேட்டுக்களுடனும் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடனும் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து இராணுவ தலைமையகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.

இந்த புதிய பாதுகாப்பு வளாகத்தில், 3ஆவது இலக்க கட்டடத் தொகுதி கடற்படைக்கும், 4ஆவது இலக்க கட்டடத் தொகுதி விமானப்படைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்துக்கு, 6 ஆவது மற்றும் 7ஆவது இலக்க கட்டடத்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இராணுவ தலைமையகத்தின் பல்வேறு பிரிவுகள் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பிரிவுகளில் அமைந்திருப்பதுடன், வாடகைக்கு பெறப்பட்டிருந்த கட்டடங்களுக்காக மாதாந்தம் செலவிடப்பட்டுவந்த 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகையை இதன் மூலம் மீதப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையமான பென்டகன் போன்று, இலங்கையின் அனைத்து பாதுகாப்பு தலைமையகங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த பாதுகாப்பு தலைமையக வளாகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாவது:

தேசிய பாதுகாப்பிலும் பிராந்திய பாதுகாப்பிலும் எமது முப்படையினர் உள்பட பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறை மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கதாகும்.

எனது 05 வருட பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் ஜனாதிபதி என்ற வகையிலும் நடைமுறைப்படுத்திய அனைத்து நடவடிக்கைகளையும் வெற்றிகொள்வதற்கு முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் தனக்கு வழங்கிய பங்களிப்புகளுக்கும் நன்றி கூறுகின்றேன் – என்றார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here