வாக்காளர்களைத் தடுக்க முடியாது – யாழ். தெரிவத்தாட்சி அலுவலர் விளக்கம்

0

தேர்தலுக்கு வாக்களிக்க செல்பவர்களை தடுப்பது குற்றமாகும் எனவும், அது தொடர்பில் உடனடியாக அறியத் தருமாறும் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“வாக்களிப்பிற்கு மக்களை தூண்டும் விதமாகவும் , அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழ் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றோம்.
நாளைமறுதினம் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் பெருமளவான மக்கள் வாக்களிக்க வேண்டும் எனும் எண்ணத்தில் அனைத்து வாக்காளர்களும் தமது வாக்குரிமையைப் பாதுகாப்பாகவும் சுயாதீனமாகவும் பயன்படுத்த வேண்டும். அதற்கான சகல செற்பாடுகளை செய்துள்ளோம்” என்று யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் குறிப்பிட்டார்.

அவ்வேளை ஊடகவியலாளர் ஒருவர் , ஒரு அரசியல் கட்சியினர் தேர்தலை புறக்கணிக்கக் கோரி வருகின்றனர். அது தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்க பெற்றதா? என்று கேள்வியெழுப்பினார்.

“அது தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்க பெறவில்லை. வாக்களிப்பது வாக்களர்களின் உரிமை. அதனைத் தடுக்கும் உரிமை எவருக்கும் இல்லை. வாக்காளர்களை வாக்களிக்க விடாது எவரேனும் தடுத்தால் அது குற்றசெயல் ஆகும். அது தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்யுங்கள். அதற்கு நடவடிக்கை எடுப்போம்” என்று பதிலளித்தார் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here