வடக்கு ஆளுநராக மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரன் – கூட்டமைப்புக்கு பச்சைக்கொடி காட்ட மகிந்த திட்டம்

0

வடக்கு மாகாண ஆளுநராக மூத்த பத்திரிகையாளர் நடேசபிள்ளை வித்தியாதரனை நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதியின் தரப்புக்கள் தெரிவித்தன.

வடக்கு மாகாண ஆளுநராக மூத்த பத்திரிகையாளர் ந.வித்தியாதரனை நியமிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பரிந்துரையை வழங்கியிருந்தது.

எனவே புதிய அரசு, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் சமிக்ஞையாக வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தை பயன்படுத்தவேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை ஜனாதிபதி கவனத்தில் எடுத்துள்ளார் என்று அவரது தரப்புக்கள் தெரிவித்தன.

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபயவால் பல்வேறு மட்டங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒவ்வொருவரும் தமக்கு சார்பானவர்களை முன்மொழிந்திருந்தனர்.

இதனடிப்படையில் கடந்த 19ஆம் திகதி தன்னை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கத் தகுதியானவரை பரிந்துரைக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன்போது தங்களுக்கும் (ராஜபக்சக்கள்) எங்களுக்கும் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) ஒத்துழைத்துச் செல்லக் கூடியவராக மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரன் உள்ளார். அவரை நியமிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை வழங்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கவேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உறுதியாக இருந்ததால் அதில் தலையீடு செய்ய பிரதமர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என்று அவரது தரப்புக்கள் தெரிவித்திருந்தன.

எனினும் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை முத்தையா முரளிதரன் நிராகரித்திருந்த நிலையில் அவரை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் முன்மொழிவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கவனத்தில் எடுத்துள்ளார் என்று ஜனாதிபதியின் தரப்புக்கள் தெரிவித்தன.

புதிய அரசு, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தும் முகமாக மூத்த பத்திரிகையாளர் நடேசபிள்ளை வித்தியாதரனை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு பரிந்துரைத்துள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் முதலீட்டில் முக்கிய கவனம் செலுத்துவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு உறுதியளித்துள்ள நிலையில் அந்த நாட்டுக்கு நன்கு அறிந்தவரான நடேசபிள்ளை வித்தியாதரனை வடக்கு ஆளுநராக நியமிப்பது சிறந்தது என்று ஜனாதிபதியின் தரப்புகளும் தெரிவித்துள்ளன.

மேலும் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை வழங்க ஜனாதிபதி முன்வந்தால் அதனை ஏற்று நல்லதொரு சேவையை செய்ய மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரன் தயாராகவே உள்ளார் என்று அவரது நெருக்கமான கொழும்புத் தரப்புக்கள் தெரிவித்தன.