காரைநகர் வைத்தியசாலையில் நிலவும் நெருக்கடிகளுக்கு உடனடித் தீர்வுவேண்டும் -பிரதேச மக்கள் கோரிக்கை

0

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் எவரும் அக்கறை செலுத்தாமையால் தாங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர் என காரைநகர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

டெங்கு நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமது வைத்தியசாலையில் நிலவும் நெருக்கடிகளுக்கு விரைந்து தீர்வு காணுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் காரைநகர் வைத்திசாலைக்கு பொறுப்பு மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால், இதுவரை அவர் கடமையைப் பொறுபேற்கவில்லை. தற்போதும் தெல்லிப்பழை வைத்தியசாலையிலேயே அவர் கடமையாற்றுகின்றார்.

அவர் தமது கடமைமையப் பொறுப்பேற்காத நிலையில் வடமாகாண சுகாதாரத் திணைக்களம் பதிலாக வேறொருவரை நியமித்திருக்க முடியும். ஆனால் சுகாதாரத் திணைக்களம் இது தொடர்பாக ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த வாரம் கர்ப்பவதிகள் கிளினிக் நடைபெற்றபோது, காலை தொடக்கம் மதியம்வரை காத்திருந்த பத்திற்கும் அதிகமான கர்ப்பவதிகள் எதுவித சிகிச்சைகளும் வழங்கப்படாமல் மருத்துவரால் திருப்பியனுப்பப்பட்டனர். அவ்வப்போது இதுபோன்று தாங்கள் மருத்துவரால் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என பாதிக்கப்பட்ட கர்ப்பவதிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இந்த வைத்தியசாலைக்கு புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதேச வைத்தியசாலைகளைப் போன்று வளங்கள் சரியாக இருக்கின்ற போதிலும் உரிய மருத்துவ சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாமை குறித்து தாங்கள் வேதனையும் விரக்தியும் அடைந்துள்ளனர் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

தகமை வாய்ந்த பொறுப்பு மருத்துவ அதிகாரி இல்லாமையே இவ்வாறான நிலைக்குக் காரணம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

சுகாதாரத் திணைக்களம் தங்கள் விடயத்தில் ஏன் பாரபட்சம் காட்டுகின்றது எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த வைத்தியசாலையில் காரைநர் மக்கள் மட்டுமன்றி, பொன்னாலை, மூளாய், சுழிபுரம் போன்ற பல பிரதேச மக்களும் வருகைதந்து சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர். தற்போது டெங்கு நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்களின் உரிய கவனிப்பு இன்மையால் வைத்தியசாலையைத் தேடிவரும் நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த விடயத்தில் வடக்கு மாகாண சுகாதாரத்துறை அதிகாரிகளும் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.