றொகின்யா இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை – சர்வதேச நீதிமன்றில் ஒன் சான் சுகி

0

சர்வதேச நாடுகளினதும் மனித உரிமை நிறுவனங்களினதும் மிக கடுமையாக இனஅழிப்பு குற்றச்சாட்டிற்கு மத்தியில், ரொகின்யா மக்களுக்கு எதிராக தனது இராணுவம் நடத்திய செயல்கள் சரியானவையே என்று சர்வதேச நீதிமன்றில் மியான்மர் அரச தலைவர் ஒன் சான் சுகி வாதிடவுள்ளார்.

2017ஆம் ஆண்டு மியான்மர் அரசபடைகள் சட்ட பூர்வமாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டனர் என்று சர்வதேச நீதிமன்றில், வாதிடுவதற்காக, நோபல் பரிசு பெற்ற மியான்மர் தலைவர் ஒன் சான் சுகி இன்று நெதர்லாந்து ஹேக் நகரை வந்தடைந்துள்ளார்.

சுமார் எழு லட்சத்திற்கும் அதிகமான றொகின்யா இஸ்லாமிய மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றியது மட்டுமல்லாது, ஒட்டுமொத்தமாக கொலை செய்தமை பெண்களை வன்கொடுமைக்கு ஆளாக்கியமை , வாழ்விடங்களுக்கு தீவைத்து எரித்தமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவர் வாதிடவுள்ளார்.

இந்தக் குற்ற செயல்களுக்கு எதிராக மேற்காபிரிக்க நாடான காம்பியா ஐக்கிய நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. கடந்த நவம்பர் மாதம் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் 17 நீதிபதிகள் பங்குபற்ற உள்ளனர்.

காம்பியாவினால் தொடுக்கப்பட்ட வழக்கில் திட்டமிட்டு ரொகின்யா இனக்குழுவை அழிக்க முனைந்தமை என்பதற்கு ஆதாரமாக கூட்டு மக்கள் படுகொலை, பெண்கள் மீதான வன் கொடுமை , திட்ட மிட்ட குடியேற்றங்கள் தீயிட்டு அழித்தமை ஆகியன முக்கிய இடம் பெற்றுள்ளது.

பொஸ்னிய மக்களுக்கு எதிராக 1995இல் நடத்திய சேர்பிய குரோசிய நாடுகளின் படுகொலைகள் குறித்து விசாரிக்கப்பட்டதன் பின்பு ஹேக்கில் இடம் பெறும் அடுத்த வழக்கு இதுவே ஆகும்.