மகிந்த ஆட்சியில் கடத்தல்கள்; வெள்ளை வான் சாரதிகள் இருவரும் சிஐடியினரால்கைது

0

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் அழைத்துவரப்பட்டு கோத்தாபய ராஜபக்ச மீது வெள்ளை வான் குற்றச்சாட்டை வெளிப்படுத்தி ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய சாரதிகள் இருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக கோத்தாபய ராஜபக்சவே செயற்பட்டார் என்றும் சுமார்  300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு கடத்தலுக்குப் பயன்படுத்திய வெள்ளை வான்களின் சாரதிகள் இருவரே இந்த தகவலை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்புத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த குற்ற விசாரணைப் பிரிவினர், சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ளனர் என்று இன்று காலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

“வெள்ளை வான் கடத்தலுடன் எனக்கு தொடர்பில்லை என்று கோத்தாபய தற்போது தெரிவித்து வருகின்றார். ஆனால் அவரே இதன் பிரதான சூஸ்திரதாரியாக செயற்பட்டவர்.

இளைஞர்களை கடத்துவதற்குப் பயன்படுத்திய வெள்ளை வான்களில் ஒன்றினது சாரதியாக நானும் பணிபுரிந்துள்ளேன்.

இந்த கடத்தலுக்கு பொலிஸாரும் , இராணுவத்தினரும் பெரிதும் ஒத்துழைப்புகளை வழங்கினர். கடத்தல் தொடர்பில் கோத்தாபய பிரேகேடியர் ஒருவருக்கும் , மேஜர் ஒருவருக்கும் ஆலோசனைகளை வழங்குவார். அவர்களே இதனை வெற்றிகரமாக செயற்படுத்துவர்.

இதன் போது நபர்களை கடத்துவதற்கு வாகனமொன்று பயன்படுத்தப்படுவதுடன் , அவரை மறைத்து வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தும் இடத்திற்கு பிரிதொரு வாகனத்திலேயே அழைத்துச் செல்வார்கள்.

இந்த இடங்களில் அவர்கள் மறைத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள். பின்னர் மேலதிக தகவல்களை பெறுவதற்காக அவர்கள் சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்படுவார்கள். இவ்வாறு பல கொடுமைகள் செய்த பின்னர் அவர்கள் கொலைச் செய்யப்படுவார்கள்.

பின்னர் சடலத்தில் உள் உறுப்புகளை அகற்றிவிட்டு மொனராகலை – சீத்தாவக்கை காட்டுப் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் போடுவார்கள். அந்த குளத்திலே 100 க்கும் அதிகமாதன முதலைகள் வாழுகின்றன.

இன்றும் கூட நீங்கள் அந்த குளத்தை சோதனையிட்டால் மனித எலும்பு கூடுகள் கிடைக்கப்பெறும். நான் இவர்களுடன் இணைந்து செயற்பட்ட போது இருவர் இவ்வாறு கடத்தப்பட்டு கொலைச் செய்யபட்டனர்” என்று சாரதிகளில் ஒருவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here