மண் விடுதலை கேட்ட நாங்கள் மணல் கொள்ளைக்குத் துணை போகலாமா?

0
  • மயூரப்பிரியன் –

மண் விடுதலை கேட்ட நாங்கள் மணல் கொள்ளைக்குத் துணை போகலாமா?, சூழற் படுகொலை இனப் படுகொலையின் இன்னொரு வடிவம், மணல் மாஃபியாக்களைக் கைது செய், அரசியல்வாதிகளுக்கு மணல் உரிமம் வழங்காதே, அரசே உன் பின்னணியில் மணல் மாஃபியாக்களா?, சட்டவிரோத மணல் அகழ்வைத் தடைசெய், மணல் வளத்தைச் சூறையாடாதே என சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு விண்ணை பிளக்கும் கோஷங்களுடன் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கடந்த புதன்கிழமை (18ஆம் திகதி) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆம். புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச தெரிவான பின்னர் வடக்கு கிழக்கில் ஆங்காங்கே மணல் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகின்றன.

புதிய ஜனாதிபதியின் ஆட்சி ஆரம்பமான போது, நாட்டில் கட்டட நிர்மாண பணிகளை முன்னெடுக்க மணல் பற்றாக்குறை, அதனை பெற்றுகொள்வதில் உள்ள நெருக்கடிகள், மணலின் அதிகரித்த விலை என்பவற்றை கருத்தில் கொண்டு அதனை நிவர்த்தி செய்யும் முகமாக ” மணல் கொண்டு செல்வதற்கு அனுமதி தேவையில்லை” எனும் அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பை கேட்டதும், மணல் தேவையில் இருந்தவர்கள் மிகுந்த சந்தோசமடைந்தனர். அதேவேளை அவர்களைவிட மண் வியாபாரம் செய்து வந்தவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த காலங்களில் குறிப்பாக மகிந்த ராஜபக்ச காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மணல் தேவையை நாகர்கோவில் , மணற்காட்டு பகுதி மண்மூலம் நிறைவு செய்யப்பட்டது. அக்கால பகுதியில் தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேரடி கண்காணிப்பில் இருந்த “மகேஸ்வரி நிதியம்” ஊடாக மணல் விநியோகம் நடைபெற்றது.

கட்டட தேவைக்கு மணல் தேவைப்படுவோர் தமது கட்டட வரைபடத்துடன் , தமக்கு தேவையான மணலின் விவரத்துடன் மகேஸ்வரி நிதியத்திடம் விண்ணப்பித்தால் அவர்கள் மணலினை பெற்று தருவார்கள்.

மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக அக்கால பகுதியில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. வகை தொகையின்றி, சூழல் பாதுகாப்பில் அக்கறை இன்றி மணல் அகழப்படுவதாகவும் , அதனூடாக அவர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொள்ளை இலாபம் பெறுவதாகவும் பெரும் குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.

அந்நிலைகளில் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மகேஸ்வரி நிதியத்தின் தொழிற்பாடுகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் மணல் பெற்றுக்கொள்வதற்கு பெரும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது.

இக்கால பகுதியில் பிரதேச செயலகங்கள் ஊடாக மணல் அகழ்வதற்கான அனுமதிகளை பெற்று கொள்வோர் அதிக விலைகளுக்கு மணலை விற்க தொடங்கினார்கள். இதனால் மணலின் விலை அதிகரித்து சென்றது. ஒரு லோட் மண் 35 ஆயிரம் ரூபா தொடக்கம் 40 ஆயிரம் ரூபா வரை சென்றது. அந்த விலை கொடுத்தும் மணலை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதேவேளை வடக்கில் போரின் பின்னர் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட உள்கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது பலரும் தவணை முறையில் பணம் செலுத்தும் நடைமுறையின் கீழ் (லீசிங்) டிப்பர் , லொறி உள்ளிட்ட வாகனங்களை கொள்வனவு செய்தனர். வீதி அபிவிருத்தி பணிகள் மகிந்த ஆட்சி காலத்துடன் முடிவுக்கு வந்தது. அத்துடன் மணல் வியாபாரமும் நெருக்கடியான கட்டத்தை அடைந்ததும் லீசிங்கில் வாகனம் எடுத்தவர்கள் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

அதனால் ஒரு மணல் அனுமதி பத்திரத்தை வைத்தே மூன்று நான்கு தரம் மணலை ஏற்றி விற்றனர். அதாவது ஒரு அனுமதி பத்திரத்திற்கு அன்றைய தினம் ஒரு தடவையே மணலினை ஏற்றலாம். அந்த அனுமதி பத்திரமே மணல் கொண்டு செல்வதற்கான வழித்தட அனுமதி (போமிட்) பத்திரமாகும். அந்த பொமிட்டில் பொலிஸார் கையொப்பம் வைத்தால் மீண்டும் அந்த பொமிட்டில் மணல் ஏற்றி வரும் போது பொலிஸார் அதனை பரிசோதித்தால் அது சட்டத்துக்கு புறம்பான மணலாக கருத்தப்பட்டு வாகன சாரதியை கைது செய்து வாகனத்தையும் மணலையும் நீதிமன்றில் முற்படுத்துவார்கள்.

அவ்வாறான சூழல் காணப்பட்டமையால் மணல் ஏற்றி வியாபாரம் செய்பவர்கள் ஒரு போமிட்ட வைத்தே ஒரு நாளைக்கு நான்கைந்து தரம் ஓடுவார்கள். . அவ்வாறு ஓடும் போது பொலிஸாரின் கண்களில் சிக்காது இருப்பதற்காக பொலிஸாரின் நடமாட்டம் குறைந்த சிறிய வீதிகள் ஊடாக செல்வார்கள். அதனால் அவ்வீதிகள் சேதமடைந்தன.

இவ்வாறு பொலிஸாரின் கண்களில் சிக்கக் கூடாது என்பதற்காகவும் , ஒரு நாளைக்கு நான்கைந்து தரம் மணல் ஏற்றி இறக்க வேண்டும் என்பதற்காகவும் சிறிய வீதிகளில் அதிவேகமாக வாகனங்களை செலுத்தி செல்வதனால் விபத்து சம்பவங்களும் நடைபெற்று உள்ளன. அதனால் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறாக மணலை பெறுவதற்கு நெருக்கடி சூழல் ஏற்பட்டு மணலின் விலை அதிகரித்தமையால் சட்டத்துக்குப் புறம்பான மணல் அகழ்வுகள் அதிகரிக்க தொடங்கின. அதனை பொலிஸார் கட்டுப்படுத்துவதற்கு பல வழிகளிலும் முயன்றனர்.

சட்டவிரோதமாக மணல் ஏற்றி செல்பவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கைகள் அதிகமானதும் பொலிஸாரை கண்டதும் சட்டவிரோத மணல் ஏற்றுபவர்கள் தப்பியோட தொடங்கினார்கள். அவ்வாறு தப்பி ஓடுபவர்களின் வாகனங்களுக்கு துப்பாக்கி சூடு நடாத்தியும் , வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் அவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

அவ்வாறான கால பகுதியில் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லிபுர ஆலயத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற வாகனத்தை பருத்தித்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் சிவராசா சஞ்ஜீவன் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் முபராக் ஆகிய இருவரும் வழிமறித்த போது வாகனத்தை நிறுத்தாது தப்பியோடினர். அதனால் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அந்த வாகனத்தில் பயணித்த துன்னாலையை சேர்ந்த யோகராசா தினேஷ் (வயது 25) எனும் இளைஞன் உயிரிழந்தார்.

அந்த சம்பவத்தின் பின்னர் பொலிஸாருக்கு எதிராக ஊரவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். பின்னர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது வரை அதன் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறாக மணலை பெற்றுகொள்வதில் ஏற்பட்ட நெருக்கடிகள் சிரமங்கள் காரணமாக கட்டுமான பணிகளை முன்னெடுப்பதில் பெரும் சாவல்கள் ஏற்பட்டன. குறிப்பாக வீட்டு திட்டங்கள் கிடைக்கப்பெற்றவர்கள் மணலை அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் திணறினார்கள். அவர்களால் தமக்கு கிடைக்கப் பெற்ற வீட்டு திட்டங்களில் மணலை பெற்றுக் கொள்வதில் எதிர்கொண்ட பிரச்சினையால் அதனை முழுமைப்படுத்த முடியாது திண்டாடினார்கள்.

இந்த நிலையிலையே புதிய ஜனாதிபதியின் ” மணல் கொண்டு செல்வதற்கு வழித்தட அனுமதி தேவையில்லை ” எனும் அறிவிப்பு வந்தது. அது கட்டுமான பணிகளை முன்னெடுத்து வந்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நல்லதொரு நோக்குடன் கொண்டு வரப்பட்ட தளர்த்தல் நிலமையினை சிலர் பேராசை கொண்டு மணலை அளவு கணக்கு இன்றி வெட்டி ஏற்றுகின்றார்கள். இதனால் பலரும் பெரும் ஆபத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இது தொடர்பில் சூழலியலாளரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்ததாவது:

புதிய அரசு ஆட்சிக்கு வந்த உடனேயே மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அவசியமாக இருந்த வழித்தட அனுமதியை நீக்கியிருப்பதால் வடக்கில் மணற்கொள்ளை விஸ்வரூபம் பெற்றுள்ளது. இதனால், சுற்றுச்சூழலில் பெரும் சீர்குலைவு ஏற்பட இருப்பதோடு யாழ்ப்பாணக் குடாநாடு தனித்தீவாகும் அபாயமும் அதிகரித்துள்ளது.

பூமி வெப்பமடைதல் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு பல கடல் நீரேரிகளைக் கொண்டுள்ளதால் குடாநாட்டுக்குள் கடல்நீர் புகும் அபாயம்; இருப்பதாகவும் இதனால், ஆனையிறவுப் பகுதியில் துண்டிக்கப்பட்டு குடாநாடு தனித்தீவாகும் எனவும் சூழலியலாளர்கள் ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்போது, நான் முந்தி நீ முந்தி என்று மணல் மாஃபியாக்களால் மணற்கொள்ளை கட்டுப்பாடற்ற முறையில் மேற்கொள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்து யாழ்ப்பாணக் குடாநாடு தனித்தீவாகும் அபாயம் மேலும் அதிகரித்திருக்கிறது.

மணல் அபிவிருத்திக்குத் தேவையான வளம் மாத்திரம் அல்ல, நிலத்தடியில் நன்னீரைத் தக்கவைப்பதிலும் பெரும் செல்வாக்கைச் செலுத்துகிறது. மணல் மேடுகள் குறையக் குறைய நிலத்தடி நன்னீரின் அளவும் குறைந்து அவ்விடத்தைக் கடல்நீர் ஆக்கிரமிக்கின்றது. போரில் ஏற்கனவே பெரும் பாதிப்பைச் சந்தித்திருந்த எமக்கு மணல் ஏற்றும் வாகனங்களுக்கான அனுமதித் தடை நீக்கம் இப்படிப் பெரும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவுள்ளது.

அரசு உடனடியாக மீளவும் மணல் ஏற்றுகின்ற வாகனங்களுக்கான அனுமதியைக் கட்டாயமாக்குவதோடு சட்டவிரோத மணல் அகழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – என்றார்.

இதேவேளை சட்டத்துக்குப் புறம்பான முறையில் மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

மண்கும்பான் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் மணலை அள்ளியவர்களை ஊரவர்கள் மடக்கி பிடிக்க முற்பட்ட போது , அவர்கள் உழவு இயந்திரத்தை கைவிட்டு தப்பி சென்றிருந்தனர். அதன் போது ஊரவர்கள் அந்த உழவு இயந்திரத்தை தீ மூட்டி எரித்தார். அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்றுறை பொலிஸார் எட்டு பேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்கள். அவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை அரியாலை பூம்புகார் பகுதியில் பக்கோ வாகனம் மூலம் சட்டத்துக்கு புறம்பான முறையில் மணல் அகழ்ந்த நால்வரை யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த 14ஆம் திகதி கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு டிப்பர் , மூன்று உழவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் மீட்டனர். அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய போது மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு தலா ஒரு இலட்ச ரூபா தண்ட பணம் அறவிடப்பட்டது. ஒருவர் சுற்றவாளி என மன்றுரைத்தர். அவரை 14 நாள்கள் விளக்க மறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுபடுத்த பொலிஸாரும் கடுமையாக முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையிலும் அனுமதிப்பத்திரமின்றிய மணல் அகழ்வுகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

சட்டத்துக்குப் புறம்பான மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் , பல இடங்களில் மணல் கொள்ளை நடைபெறுகின்றது. புதிய அரசு வந்த கையோடு மீள மண் கொள்ளை தலையெடுத்துள்ளது.வடமராட்சி கிழக்கில் மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் மண் கொள்ளை மிக மோசமாக நடந்திருந்தது. அது தொடர்பில் வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்பினையும் பெற்றுக்கொண்டோம்.

அந்தக்கால பகுதியில் மகேஸ்வரி நிதியம் எனும் பெயரில் மணல் கொள்ளை நடைபெற்றது. அப்படியான செயல் இப்ப மீளவும் ஆரம்பித்துள்ளது. நான் சில இடங்களுக்கு நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அதனடிப்படையில் மிக விரைவில் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் – எனத் தெரிவித்தார்.

வடக்கில் யாழ்.மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு , தீவகம், அரியாலை கரையோர பிரதேசங்களான பூம்புகார் , மணியந்தோட்டம் உள்ளிட்ட பகுதி , கிளிநொச்சி மாவட்டத்தில் ஆற்றுப்படுக்கைகளான பன்னங்கண்டி , திருவையாறு , அக்கராயன், கண்டாவளை பகுதிகளிலும் பூநகரி கௌதாரி முனை , கிளாலி என 40க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் சட்டத்துக்குப் புறம்பாக அகழப்படுகின்றன.

முல்லைத்தீவில் பறங்கியாறு , பாலியாறு, மாந்தை கிழக்கு , என பதினைந்திற்கும் மேற்பட்ட இடங்களிலும் , மன்னாரில் தேவன் பிட்டி , அருவியாறு , உள்ளிட்ட மன்னார் கரையோர பிரதேசங்களிலும் , வவுனியாவில் கனகராயன் குளம் , புளியங்குளம் உள்ளிட்ட குளக்கரைகளை அண்டிய பகுதிகளும் அதிகளவான சட்டத்துக்குப் புறம்பான மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சட்டத்துக்குப் புறம்பான மண் அகழ்வினை கட்டுப்படுத்தி சூழல் பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டிய பெரும் கடப்பாடு ஜனாதிபதிக்கு உண்டு. அதேவேளை கட்டட நிர்மாண பணிகளுக்கு தேவையான மணலை தேவையானவர்கள் பெற்றுகொள்ளவும் ஆவண செய்ய வேண்டும்.

எனவே மணல் விநியோகத்தை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரையறை செய்து மணல் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க ஏதுவான சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அது விரைந்து செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே பலரின் விருப்பு. அதன் ஊடாக சுற்று சூழலை பாதுகாக்க முடியும் என்பது பலரின் எண்ணப்படாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here