காரைநகர் விவசாயிகளின் கோரிக்கை அதிகாரிகளால் அலட்சியம் – நெற் செய்கைக்கு பாதிப்பு

0

காரைநகர் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் குடிமனைகளிலிருந்து வரும் மேலதிக மழைநீரை நெல்வயல்களினுள் உட்புகாதவாறு நீண்டகாலமாக பாதுகாத்து வந்த பெரும்பத்தை வாய்க்கால் மற்றும் வேரப்பிட்டி கல்வந்தாழ்வு வாய்க்கால் என்பன அழிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ அதிகாரி ஒருவரினால் எவ்வித அனுமதியுமின்றி புதிதாக ஒரு குளக்கட்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பத்தை தடுப்பனைக்கு மேலதிக மழைநீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வருடம் பெரும்பத்தை வயலில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இன்னும் சில நாள்களில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளனர். எனினும் வயலில் தேங்கியிருக்கும் மேலதிக மழைநீரை வெளியேற்றித்தருமாறு பெரும்பாக உத்தியோகத்தரிடமும் பிரதேச செயலரிடமும் விவசாயிகளும் விவசாய சம்மேளனமும் நேற்று வியாழக்கிழமை வேண்டுகொள் விடுத்திருந்தனர்.

இதற்கு அமைய இன்று இன்று வெள்ளிக்கிழமை பிரதேச செயலர், பெரும்பாக உத்தியோகத்தர் மற்றும் நீர்பாசனத் திணைக்களத்தினர் வயல்களை வந்து பார்வையிட்டு வயலிலுள்ள மேலதிக நீரை அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள குளக்கட்டினை வெட்டி தடுப்புப் பலகை ஊடாக வெளியேற்ற ஆலோசனை நடத்தப்பட்டது.

எனினும் இந்தக் கூட்டத்துக்கு வருகை தந்த சிலர், புதிதாக அமைக்கப்பட்ட குளக்கட்டினை வெட்டிவிட முடியாது என கூறினர். அதனை ஏற்ற அரச அதிகாரிகள், விவசாயிகளுக்கு எந்த ஒரு தீர்வினையும் வழங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

அத்துடன், இந்த விவகாரத்தை வேண்டுமென்றால் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவித்து தீர்வைப் பெறுமாறும் அதிகாரிகள் விவசாயிகளுக்கு பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துள்ளனர்.

காரைநகர் பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகளின் இந்தச் செயற்பாடு தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காரைநகர் விவசாயிகள் கேட்டுள்ளனர்.