காரைநகர் விவசாயிகளின் நெற்செய்கை அழிவடைந்தால் இழப்பீடு

0

காரைநகர் பெரும்பத்தை வாய்க்கால் மற்றும் வேரப்பிட்டி கல்வந்தாழ்வு வாய்க்கால் உள்ளிட்டவை அழிக்கப்பட்ட நிலையில் அவற்றால் வயல்களிலிருந்து வெள்ள நீரை வெளியேற்ற முடியாத நிலை காணப்படுகின்ற நிலையில் நெற்செய்கை அழிவடைந்தால் காப்புறுதி ஊடாக இழப்பீடு வழங்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளர் இரத்னகுமார் நிஷாந்தன் உறுதியளித்துள்ளார்.

காரைநகர் விவசாயிகளின் கோரிக்கைக்கு அதிகாரிகள் அலட்சியம் என்ற தலைப்பில் முதல்வனின் “மக்கள் முகம்” பகுதியில் விவசாயிகளின் பிரச்சினை நேற்றுமுன்தினம் இரவு வெளிக்கொண்டு வரப்பட்டது. அதுதொடர்பில் கவனம் செலுத்திய யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளரை இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.

அதனடிப்படையில் நேற்று முற்பகல் காரைநகருக்குச் சென்றிருந்த யாழ்ப்பாணம் மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளர் இரத்னகுமார் நிஷாந்தன், விவசாயிகளின் பிரச்சினையை நேரில் ஆராய்ந்தார்.

அனுமதியின்றி அமைக்கப்பட்ட குளக்கட்டை வெட்டி வயல்களில் உள்ள வெள்ளநீரை அகற்ற ஒரு தரப்பினர் மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.

பெரும்பத்தை வயலில் சுமார் 60 பரப்பு வயல் காணியில் செய்கை செய்யப்பட்ட ஆட்டக்காரி இன நெல் அடுத்த சில தினங்களில் அறுவடை செய்யப்பட்டவேண்டும். எனினும் வயலில் வெள்ளம் நீர் இருப்பதால் அறுவடை செய்ய முடியாது அழிவடைதனால் அதற்கு முழுமையான காப்புறுதி இழப்பீட்டை வழங்க கமநல சேவைகள் உதவி ஆணையாளர் உறுதியளித்தார்.

எனினும் பெரும்பத்தையில் மீதமுள்ள வயல்களின் நெல் அறுவடைக்கு இரண்டு வாரங்கள் காலமிருப்பதால் அதற்கமைய தீர்மானம் எடுக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளர் இரத்னகுமார் நிஷாந்தன் குறிப்பிட்டார்.

அந்த வயல்களிலும் நெல் அறுவடை பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது என்று அவர் இணக்கம் தெரிவித்தார்.

தமது பிரச்சினைகள் தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டை எடுத்துக்கொள்வதற்கு உடன் நடவடிக்கை எடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளர் இரத்னகுமார் நிஷாந்தன் ஆகியோருக்கு பெரும்பத்தை விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here