காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்

0

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஊறவுகளால் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“பிள்ளைகளை உயிருடன் தந்தபோது நீங்கள்தான் பாதுகாப்புச் செயலாளர், போரில் இறந்தனர் என்று கூறும் நீங்கள் இப்போது ஜனாதிபதி” என்று ஜனாதிபதி கோத்தாபயவின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.  

தமது உறவுகளை தேடி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உறவுகள் தொடர்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் தமது கோரிக்கைகளை அவர்களுக்கு சொல்லும் வகையிலும் சர்வதேசத்துக்கு தமது நிலையை உணர்த்தும் விதமாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக புதிய ஜனாதிபதியின்  கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து உறவுகள் கலந்துகொண்டனர். 

போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழர் பிரச்சனைகளை சாதாரணமாகக் கருதி பொறுப்பற்றவிதத்தில் கருத்துக்கள் கூறிச் செயற்படும் ஜனாதிபதியின் கூற்றைக் கண்டிப்பதுடன் சர்வதேச தலையீட்டை மீண்டும் வலியுறுத்தி இப்போராட்டத்தை எட்டு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் சங்கத்தைச் சேர்ந்தவர்களாகிய நாம் இணைந்து நடாத்துகின்றோம்.

காணாமலாக்கப்பட்டவர்கள் அனைவரும் இறுதிப் போரில் இறந்திருக்கலாம் எனவும்,மேலும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசியல் செய்வதாகவும் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் என்னும் பதிவினைபெற்றுக்கொண்டு இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் இலங்கையின் புதிய ஜனாதிபதி கூறிவருவதுடன் ஐ.நாவின் 30/1ம் தீர்மானத்தினையும் கடுமையாக எதிர்த்துவருகின்றார்.

இவரது இந்நிலைப்பாட்டினை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இவரது்செயற்பாடுகள் எம்மை அச்சம் கொள்ளவைக்கின்றன.

முன்னைய இலங்கை ஜனாதிபதிகள் போல் தற்போது பதவியேற்றுள்ள புதிய ஜனாதிபதியும் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யாருமில்லை’’எனக் கூறுகின்றார். இவர் ஆட்சிக்கு வரும்போதே இவ்வாறுதான் கூறுவார் என்பதனைநாம் உணர்ந்திருந்தோம். ஆனாலும் ஏனைய ஜனாதிபதிகள் போல் இவர் இவ்விடயத்தைத் தட்டிக்கழிக்க முடியாது. ஏனெனில் இவர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோதே நாம் இராணுவத்திடம் எமது உறவுகளை ஒப்படைத்தோம்.

அதற்கான சாட்சிகளாக நாம் உள்ளபோதும் யாரும் இராணுவத்தினரால் காணாமலாக்கப்படவில்லையென ஜனாதிபதியால் எவ்வாறு கூறமுடியும்?

இரகசியமுகாம்களில் எமது உறவுகள் தடுத்து வைக்கப்படவில்லை என ஊடக பிரதானிகளிடம் ஜனாதிபதி கூறியுள்ளார். அவ்வாறாயின் எமது உறவுகள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது?

எமது உறவுகள் பலவந்தமாக இராணுவத்தினரால் கடத்தப்பட்டபோதும் நாம் எமது உறவுகளை இராணுவத்திடம் அவர்களின் வார்த்தையை நம்பி ஒப்படைத்து, பின்னர் காணாமலாக்கப்பட்டபோதும் தற்போதைய இலங்கை ஜனாதிபதியே பாதுகாப்புச் செயலராக இருந்தார். எனவே தற்போதைய இலங்கை ஜனாதிபதியே எமக்கு உரிய பதிலினை வழங்கவேண்டும்.

மேலும் இலங்கை அரசின் முக்கியமான அமைச்சுக்கள் அனைத்தையும் பாதுகாப்புதுறைக்குக் கீழ் கொண்டுவந்து இவர் ஆட்சிபீடமேறியதை தொடர்ந்து வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்போர் புலனாய்வாளர்களின் நெருங்கிய கண்காணிப்புக்குட்பட்டுள்ளனர்.

இலங்கை அரசு எமது பிரச்சனையை புறக்கணித்ததாலும், உள்ளகத்தீர்வுப் பொறிமுறை அளித்த ஏமாற்றத்தாலும் நாம் சர்வதேசத்திடம் எமது ஆதாரங்கள் அனைத்தையும் ஒப்படைத்து நீதி கோரவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்நிலையில் அண்மையில் எமது மாவட்டத் தலைவிகள் மற்றும் உறுப்பினர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீடு தாக்கப்பட்டுள்ளது.மேலும் தொடர் போராட்டத்தில் கலந்துகொண்ட எமது உறவுகளில் 56 இற்கு மேற்பட்டோர் மனஉழைச்சலுடன் இறந்தும் விட்டார்கள் ஆனாலும் ஜனாதிபதியின் பொறுப்பற்றபேச்சும் செயலும் மேலும் எம்மில் பலரை மனஉழைச்சலுக்குஉள்ளாக்கி வருகிறது.

இந்நிலை இவ்வாறு இருக்க, காணாமல் போனோர் அலுவலகமும் இழப்பீட்டு அலுவலகமும் எம்மீது திணிக்கப்படுகின்றது. இவ்விருசட்டங்களும் அமுல்படுத்துவதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களாகிய எமது கருத்துக்கள் பெறப்பட்டு உள்வாங்கப்படவில்லை.

இழப்பீட்டு அலுவலகமானது இறப்பினை உறுதிசெய்தவர்களுக்கும் சொத்திழப்பு ஏற்பட்டவர்களுக்கும் பொருத்தமாக இருக்கலாம் ஆயினும் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பொருத்தமாக இருக்குமெனநாம் ஒருபோதும் கருதவில்லை.

ஆகவே,பதற்றமான சூழலினை ஏற்படுத்தி எம்மை அச்சமுறுத்துவதை விட்டுவிட்டு எமக்குஉரியபதில் வழங்கப்படவேண்டும். அதற்கு அமைய சர்வதேசம் காலஅவகாசம் மற்றும் பணஉதவியளிக்காது இலங்கை ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து எமக்கான நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில்
யோ.கனகரஞ்சனி,
தலைவர்.

ஆ.லீலாதேவி,
செயலாளர்.