விருச்சிக ராசிக்காரர்களே! நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும்!!

0

கணித்தவர் – தமிழக பிரபல சோதிடர் சிவல்புரி சிங்காரம்
விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)


வந்துவிட்டது புத்தாண்டு. வருடத் தொடக்கமே உங்களுக்கு வசந்த காலமாகவே மாறப்போகிறது. ஏனெனில் சூரியன், புதன், வியாழன், கேது, சனி ஆகிய ஐந்து கிரகங்களின் சேர்க்கை, தன ஸ்தானத்திலேயே அமைந்திருக்கிறது. ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே இருக்கிறார். எனவே யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். யோகங்கள் படிப்படியாக வந்து கொண்டேயிருக்கும். யாகங்களிலும், இறைவழிபாட்டிலும் மனதைச் செலுத்தும் உங்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகிறது.
தனாதிபதி குரு தன ஸ்தானத்திலேயே இருப்பது மிகமிக யோகமாகும். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்திருப்பது இன்னும் அதிக யோகத்தைக் கொடுக்கும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வருமானம் உயர வழிபிறக்கும். ஞானகாரகன் கேது 2-ல் இருப்பதால் ஆன்மிகத் தேடல் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிகள் செய்வதற்கு வாய்ப்புகள் கைகூடி வரும்.

லாபாதிபதி புதன் சூரியனோடு இணைந்து புத – ஆதித்ய யோகம் ஏற்படுகிறது. எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையில் ஈடுபாடு கொண்டிருப்பவர்கள், அதில் பிரகாசிக்கும் நேரம் இது. கவுரவம், அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்கள் ஆதரவு கொடுப்பர். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மங்கல நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நடைபெறும்.

பணப்புழக்கம் தரும் குருவின் பார்வை

வருடம் தொடங்கும் பொழுது குரு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகிறது.சாதாரண மனிதனையும் சக்கரவர்த்தியாக்கும் ஆற்றல் குருவின் பார்வைக்கு உண்டு. அந்த அடிப்படையில் ஜீவன ஸ்தானத்தை பார்க்கும் குருவால் தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சுயதொழில் செய்பவர்கள், தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவர்.

மகர குருவின் சஞ்சாரம்

8.7.2020 முதல் 9.9.2020 வரை தனுசு ராசிக்குள் குரு வக்ரம் பெறுகிறார். இக்காலத்தில் சனியும், தனுசு ராசிக்குள்ளேயே வக்ரம் அடைகிறார். எனவே பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை உருவாகும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே, அடுத்ததொகை வந்து சேரும். பாகப்பிரிவினையில் தடை ஏற்பட்டாலும், கடைசி நேரத்தில் அனைத்தும் சுமுகமாக முடியும். விரயங்களை சுபவிரயமாக மாற்றிக் கொள்ளுங்கள். சனி வக்ரத்தால், எடுக்கும் முயற்சிகள் பல தடைகள் வந்தாலும், இறுதியில் கைகூடிவிடும். சொத்து சுகங்கள் வாங்குவது முதல் வாகனம் வாங்கும் யோகம் வரை நல்ல பலன்களே நடைபெறும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

15.11.2020-ல் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் மகர ராசியில் சஞ்சரிப்பார். அது குருவுக்கு நீச்ச வீடு. இருப்பினும் குருவின் பார்வை நற்பலன்களையே வழங்கும். உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் குரு பார்வை பதிகிறது. எனவே குருப்பெயர்ச்சிக்குப் பிறகு இன்னும் முன்னேற்றம் அதிகரிக்கப் போகிறது. சமுதாயத்தில் உயர்ந்தநிலை உருவாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாட்டில் இருந்தும் அழைப்புகள் வரலாம். உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து, வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். புதிய வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. சுப நிகழ்ச்சிகள் வரிசை கட்டி நடைபெறும் நேரம் இது.

ராகு – கேது பெயர்ச்சிக் காலம்

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் ராகு பகவான், 1.9.2020 அன்று நடைபெறும் பெயர்ச்சிக்குப் பிறகு, 7-ம் இடத்திற்கு வரப்போகிறார். அதே போல் 2-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் கேது, உங்களுடைய ஜென்ம ராசிக்கு வருகிறார். ராகு – கேதுக்கள் சுயபலமற்ற கிரகங்கள். அவர்கள் யார் வீட்டில் சஞ்சரிக்கிறார்களோ அவர்களுக்குரிய பலன்களையே வழங்குவார்கள்.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, சுக்ரன் வீட்டில் ராகுவும், செவ்வாய் வீட்டில் கேதுவும் இருக்கிறார்கள். உங்கள் ராசிநாதனாக செவ்வாய் விளங்குவதால் யோசிக்காது செய்த காரியங்களில் கூட யோகங்கள் ஏற்படும். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். தேசப்பற்றும், தெய்வப்பற்றும் தானாக வந்து சேரும். திடீர் மாற்றங்களும், தெய்வீக சிந்தனைகளும் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மகான்களின் தரிசனமும், அருளாளர்களின் ஆதரவும் உண்டு. தாய்மாமன் வழி ஆதரவு சாதகமாக அமையும். வருங்கால நலன்கருதித் தீட்டிய திட்டங்கள் எல்லாம் வெற்றி பெற கேதுவின் ஆதிக்கம் உங்களுக்குக் கைகொடுக்கும்.

சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது ஒரு வகைக்கு நன்மைதான். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள். கொடுக்கல் – வாங்கல்கள் ஒழுங்காகும். இதுவரை முடிவடையாத திருமணப் பேச்சுக்கள் இப்பொழுது முடிவாகலாம். அரசுவழி வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கை கூடும். வெளிநாடுகளில் இருந்தும் உங்களுக்கு அழைப்புகள் வரலாம். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். பதவி யோகமும் உண்டு. வாழ்க்கைத் தேவைகள் ஒவ்வொன்றாகப் நிறைவாகும். தங்கம் வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள். இக்காலத்தில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை, யோகபலம் பெற்ற நாளில் செய்து கொண்டால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

சனிப்பெயர்ச்சிக் காலம்!

உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவானை, ‘குடும்பச் சனி’ அல்லது ‘பாதச்சனி’ என்று சொல்வார்கள். 29.4.2020 முதல் 14.9.2020 வரை தனுசு ராசிக்குள், சனி பகவான் வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் உடன்பிறப்புகளைக் கொஞ்சம் அனுசரித்துக் கொள்வது நல்லது. சுபவிரயங்கள் அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோக மாற்றங்கள், ஊர் மாற்றங்கள் உறுதியாகலாம். வரும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாகவே அமையும்.

13.2.2020 முதல் 22.3.2020 வரை தனுசு ராசியில் செவ்வாய்- சனி சேர்க்கை ஏற்படுகிறது. 3.5.2020 முதல் 17.6.2020 வரை தனுசு ராசியில் இருக்கும் சனி, கும்பத்தில் இருக்கும் செவ்வாயை பார்க்கிறது. இக்காலத்தில் விரயம் கூடுதலாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, சொந்தங்களுக்காக செலவழிப்பது போன்றவை ஏற்படும். ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் தேவை. அலைச்சலைக் குறைத்துக்கொள்வது நல்லது. அதிகார வர்க்கத்தினரை நம்பி ஈடுபடும் காரியங்கள் தாமதமாகலாம்.

26.12.2020 உத்ராடம் 2-ம் பாதத்தில் மகர ராசியில் சனி பகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். இப்பொழுது முழுமையாக சனி உங்களுக்கு விலகி விட்டது. எனவே வருடக் கடைசியில் உங்களுக்குப் பொன்னும், பொருளும், போற்றுகின்ற செல்வாக்கும் பெருகும் புதிய பாதை புலப்படும். நட்பு வட்டம் விரியும். உறவினர்களும், நண்பர்களும் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்வர். கடன்சுமை குறையும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு தலைமைப் பதவிகள் தானாகவே தேடி வரும்.

செல்வ வளம் தரும் வழிபாடு

பிரதோஷ விரதம் இருந்து நந்தியை வழிபட்டு வருவதன் மூலம் மகத்துவம் பெறலாம்.

குருவின் வக்ர காலமும், பரிவர்த்தனை யோகமும்
27.3.2020-ல் மகர ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அங்கு 7.7.2020 வரை இருக்கிறார். இக்காலத்தில் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் இருப்பதோடு பரிவர்த்தனை யோகமும் பெறுகிறார்கள். பரிவர்த்தனை யோகம் என்பது யோகங்களில் சிறந்த யோகமாகும். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு தனபாக்கியாதிபதியாக விளங்குபவர். சகாய ஸ்தானத்திற்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் சனி. இந்த இரண்டு கிரகங்களும் தங்கள் வீடுகளை மாற்றிக் கொண்டு பரிவர்த்தனை யோகம் பெறுவதால் சுகங்களும், சந்தோஷங்களும் இந்தப் புத்தாண்டில் அதிகமாகவே வரும். ஈர்ப்புசக்தி மிக்க உங்கள் பேச்சைக் கேட்டுஎல்லோரும் எளிதில் காரியங்களை முடித்துக்கொடுப்பர். பிள்ளைகளின் திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகிறது. புதிய முயற்சிகளில் வெற்றி, பொருளாதாரத்தில் உயர்வு, எதிர்பார்ப்புகள் நிறைவேறுதல், தொழிலில் இருமடங்கு லாபம் கிடைத்தல் போன்றவை அனைத்தும் நடைபெறும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப் போகிறது. கணவன்- மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். புகுந்த வீட்டிற்கும், பிறந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதம் உங்கள் வாழ்க்கைப் பாதை அமையும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். பணிபுரியும் பெண்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு குறிப்பிட்டபடி வந்து சேரும். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். அதிகார பதவி கூட உங்களுக்கு வரலாம். வெளிநாடு பயணம் செல்லும் வாய்ப்பும் கைகூடலாம். உடன் பிறந்தவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெறும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப்பெருமானையும், சஷ்டி விரதமிருந்து முருகப்பெருமானையும் வழிபடுவது நல்லது.