சுமந்திரன் எம்.பியை கொல்லச் சதி; முன்னாள் போராளிகளை விடுவிக்கக் கோரிக்கை

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை விடுதலை செய்து தருமாறும் அவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி மற்றும் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் 2017 ஆம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் 2018ஆம் ஆண்டு விசாரணை எனக் கூறி அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய நால்வரும் தற்பொழுதும் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் விடுதலை செய்வதற்கு நாட்டின் ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.

இதேவேளை, தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் உறவினர்கள் இன்று யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை சந்தித்து ஜனாதிபதிக்கு தமது கோரிக்கை மனுவைக் கையளித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் உள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை இன்று பிற்பகல் அவர்கள் சந்தித்தனர்.

இந்த விடயத்தில் கரிசனை கொண்டு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் பேச்சு நடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here