ஈரானுக்கு எதிராக போர் அறிவிக்க ட்ரம்புக்கு அதிகாரம் இருக்கிறதா? -கிளம்பியது விவாதம்

0

போர் அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற விவாதத்தை ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க காங்கிரஸ் மீண்டும் கிளப்பியுள்ளது.

இதன் மூலம் ஈரான் மீது எந்த ஒரு ராணுவ நடவடிக்கையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ள முடிவெடுத்தாலும் ஜனநாயகக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸிலிருந்து அனுமதி பெற்றாக வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

நாடாளுமன்றப் பேச்சாளர் நான்சி பெலோஸி கூறும்போது, “ட்ரம்பின் ராணுவ அதிகாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் அமெரிக்க உயிர்களையும் மதிப்பீடுகளையும் காக்க வேண்டியுள்ளது, நிர்வாகம் போர் வெறியைக் கட்டுப்படுத்தி மேலும் வன்முறை நிகழாமல் தடுக்க வேண்டியுள்ளது, என்றார்.

ஆனால் ஜனாதிபதி மாளிகை இந்த தீர்மானத்தை, ‘முட்டாள் தனமானது, முழுதும் தவறான வழிமுறை’என்று விமர்சித்துள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 3 குடியரசு கட்சி உறுப்பினர்களும் எதிராக 8 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் வாக்களித்தனர். மற்றபடி இந்தத் தீர்மானத்திற்கு 224-194 என்ற வாக்கு எண்ணிக்கையில் ஆதரவு கிடைத்துள்ளது.

மேலும் பெலோசி கூறும்போது, “காசிம் சுலைமானியைக் கொலை செய்தது ஈரானைத் தூண்டிவிடுவதும் அளவுக்கு அதிகமானதும் ஆகும்” என்று விமர்சித்தார்.

ஆனால் இந்தத் தீர்மானமெல்லாம் ஜனாதிபதி ட்ரம்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தாது என்று குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ் ஹவுஸ் அறிக்கையில், “ஈரான் அரசு அல்லது அதன் ராணுவம் மீது அமெரிக்கப் படையினை ஏவி விடும் ட்ரம்ப்பின் எந்த ஒரு முடிவையும் இந்தத் தீர்மானம் தடுக்கிறது. காங்கிரஸ் போர் அறிவித்தால்தான் போர் தொடுக்க முடியும்” என்றுள்ளது.