ஏபி கிண்ண ரி20; வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி யாழ். மாவட்டச் சம்பியன்

0

ஏபி விளையாட்டுக் கழகம் (Aggressive Boys Sports club) நடத்திய ரி20 கிரிகெட் போட்டியில் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி யாழ்ப்பாணம் மாவட்ட சம்பியனானது.

இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்றலைட் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து ஆடிய ஓல்ட் கோல்ட்ஸ் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியனானது.

ஏபி விளையாட்டுக் கழகத்தினால் ஆண்டுதோறும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே ரி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது.

இதில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லீக் போட்டிகள், காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் என 28 போட்டிகளின் நிறைவில் போட்டியில் யாழ்ப்பாணம் சென்றலைட் விளையாட்டுக் கழக அணியும் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருந்த இறுதிப் போட்டி மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பின் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகளுக்கு சாதகமான காலநிலை தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் இறுதிப் போட்டி இன்று (ஜன.12) ஞாயிறுக்கிழமை பிற்பகல் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணித்தலைவர் ரி.பிரியலக்ஸன் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

அதனடிப்படையில் களமிறங்கிய ஓல்ட் கோல்ட்ஸ் அணிக்கு ஆரம்ப வீரர் எஸ்.மதுஷன் அதிரடி ஆட்டத்தை வழங்கினார். மதுஷன் 20 பந்துகளில் அரைச்சதம் விளாசி அசத்தினார்.

இறுதியில் மதுஷன் 41 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்களாக 84 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின் வரிசையில் எஸ். நிரோசன் அதிரடியாக அரைச்சதம் அடிக்க ஓல்ட் கோல்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களையிழந்து 182 ஓட்டங்களைக் குவித்தது.

எஸ். நிரோசன் 37 பந்துகளில் 53 ஓட்டங்களை ஆட்டமிழக்காது எடுத்தார். ஆர்.குகன் ஆட்டமிழக்காது 11 ஓட்டங்களை எடுத்த நிலையில் உபாதை காரணமாக துடுப்பாட்டத்திலிருந்து இடைவிலகினார்.

பதிலுக்கு 20 ஓவர்களில் 183 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய யாழ்ப்பாணம் சென்றலைட் அணி செல்டனும் டார்வீனும் மட்டும் அதிரடியாக ஆடி நம்பிக்கையளித்தனர்.

முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் கைகொடுக்காத நிலையில் யாழ்ப்பாணம் சென்றலைட் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களையிழந்து 153 ஓட்டங்களை மாத்திரமெடுத்து 29 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதன்மூலம் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணி யாழ்ப்பாணம் மாவட்டச் சம்பியனானது.

போட்டியின் நாயகனாகவும் போட்டித் தொடரின் நாயகனாகவும் வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் அணியின் சகலதுறை வீரர் செல்வராசா நிரோசன் தெரிவானார்.

இந்தப் போட்டியின் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here