கல்வி வளர்ச்சிக்கு அனைவரும் பங்காளிகளாக இருக்க வேண்டும் – வடக்கு கல்விச் செயலாளர் எல்.இளங்கோவன் வலியுறுத்து

0

கல்வி என்பது தனியே மாணவர்களை மையப்படுத்தியது அல்ல. இதில் அனைவருக்கும் பங்கு இருக்கின்றது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன்.

அரியாலை அபிவிருத்திச் சங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற பொருளாதார வசதிகுறைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தின் ஊடாக 2018 க.பொ.த சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், 2019 தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும், தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவி வழங்கும் நிகழ்வும் கடந்த சனிக்கிழமைஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் சு.சண்முகரட்ணம் தலைமையில் நடைபெற்றது.

அவ்விழாவிற்கு முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எல்.இளங்கோவன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணம் கற்றவர்களாலும், கற்று உயர்ந்தவர்களாலும் ஒரு காலத்தில் மேலோங்கியிருந்தது. அத்தகைய காலங்களில் பெற்றோர்களின் ஊக்கமும், சமூகத்தின் அக்கறையும் மிகையாக இருந்தது. இன்று அத்தகைய நிலை மாறியிருக்கின்றது. பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் அக்கறையும், சமூகத்தின் அக்கறையும் குறைவாகவே உள்ளது.

சமூகம் எனும்போது ஒவ்வொரு கிராமத்திலும் தமது கிராமத்திற்கான கல்வி அறிவை வளப்படுத்தும் ஆர்வம் குறநை்துள்ளது. சமூகக்கட்டமைப்புகள் சீர்குலைந்துள்ளன. இவற்றுக்குள்ளே அகப்படுகின்ற குழந்தைகளும் சீர்குலைக்கப்படுகின்றார்கள் என்றே கருதப்படுகின்றது.

அரியாலை அபிவிருத்திச் சங்கம் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியில் இவ்வளவு அக்கறையாக இருப்பது பெருமையாக உள்ளது. இத்தகைய நிலை அனைத்துக் கிராமங்களிலும் உருவாகுமாக இருந்தால் நாம் பழைய நிலைக்கு மீண்டுவிடுவோம்.

ஆகையால் வடக்கு மாகாணத்தின் கல்வியை மேம்படுத்த நாம் அனைவரிடம் இருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here