மைதானத்தை மீட்க மாணவர்கள் போராட்டம்

0

விளையாட்டு மைதானத்தை மீட்டுத்தரக் கோரிக்கையை முன்வைத்து மன்னார் கருங்கண்டல் மகா வித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மடு கல்வி வலயத்திற்குற்பட்ட கருங்கண்டல் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்கு முன் ஒன்று கூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பழைய மாணவர்கள்,பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் 60 வருடங்களுக்கு மேலாக பாடசாலைக்கான விளையாட்டு மைதானமாக இருந்த காணி, மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றின் அனுமதியுடன் விளையாட்டுக்கழகம் ஒன்றிற்கு வழங்கப்பட்டு அங்கு கட்டடம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியும் இந்த மைதானத்தில் இடம் பெற உள்ளது.

இந்த நிலையில் அந்த மைதானத்தில் கட்டடம் கட்டும் நடவடிக்கை இடம் பெற உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மைதானத்தை பாதுகாக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

இதன் போது மடு வலயக்கல்விப்பணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர் தனித்தனியாக தமது கோரிக்கை அடங்கிய மனுவை வலயக்கல்விப் பணிப்பாளரிடம் கையளித்தனர்.

இதன் போது குறித்த பிரச்சினை தொடர்பாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அவர் மாணவர்களுக்கு உறுதியளித்தார்.