சுமந்திரன் தலைவராவது தமிழர்களுக்கு சாபக்கேடு – சுரேஷ் பிரேமச்சந்திரன் கணிப்பு

0

தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வருவராக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடாக அமையும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரம் மேலும் தெரிவித்ததாவது;

தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசு தமிழ்மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப  உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினைதான் கொண்டுள்ளமையை எங்களால் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகின்ற பொதுத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழ் மக்கள் மீது பல்வேறு பொய்களை கூறி மக்களிடம் வாக்கு கேட்கும் ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே  சம்பந்தன் தான் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கூறியுள்ளார். மாவை சேனாதிராஜாவும் பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்கின்ற ஒரு கருத்தும் தற்போது பரவி வருகின்றது.

இவர்கள் தேசியப்பட்டியல் மூலம் உள்வாங்க படலாம் என்ற ஒரு கருத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் கூறப்பட்டு வருகின்றது. .

தேர்தலில் போட்டியிடாமல் தலைவர்கள் தேசியப்பட்டியல் மூலம் வருவதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் அவர்களை நிராகரித்து விடுவார்கள் என்ற யோசனையில் அவர்கள் அவ்வாறான கருத்துக்களை முன்வைத்து வருவதனையும் எங்களால் காணக்கூடியதாக உள்ளது. 

மாவை சேனாதிராஜா, ஒரு கருத்தினைக் கூறி வருகின்றார். பொதுத் தேர்தலில் போட்டியிடுவது போட்டியிடாமல் இருப்பது அது எனது சொந்த பிரச்சனை, அதனைப் பற்றி மற்றவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்று கூறுகின்றார்.

தமிழ் மக்கள் தற்பொழுது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளார்கள்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் கடந்த அரசிடமிருந்து எந்தவிதமான ஒரு தீர்வினை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. மாறாக அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இதுவே அவர்களின் தவறான நோக்கமாகவும் இருந்தது. மாறாக கடந்த கால அரசு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது தவிர அவர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் பெற்றுக் கொண்டு முடிந்திருக்கவில்லை.

மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் போன்றவர்கள் எடுத்த தவறான முடிவுகளே தமிழ்மக்களை இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க முடியாத தமிழ் தேசியக்கூட்டமைப்பு, வடமாகாண ஆளுநர் சார்ள்ஸை  சந்தித்து கலந்துரையாடி உள்ளது. கம்பரலிய திட்டத்தினூடாக கடந்த கால அரசின் மூலம் விடுவிக்கப்பட்ட நிதிகளை தற்போதுள்ள அரசு ஊடாக விடுவிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயன்று வருகின்றது.

இதன்மூலம் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழ் மக்களை கம்பெரலிய திட்டத்தினூடாக பொதுத் தேர்தலில் வாக்கு வங்கியை நிறைவு செய்வதற்கு முயற்சிக்கின்றனர் – என்றார்.