தமிழர்களுக்கான தீர்வை இந்தியா தரவேண்டும் என்பதில் உடன்பாடில்லை; உள்நாட்டிலேயே தேடவேண்டும் – மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு

0

”வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கான தீர்வை இந்தியா தர வேண்டும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் எனக்கு உடன்பாடில்லை. தீர்வு எம்மிடமே உள்ளது. அதைவிடுத்து தீர்வை வெளியில் தேடுவதில் அர்த்தமில்லை. நாம் எமது பிரச்சினைகளை ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும். அவற்றை தொடரவிடுவதில் அர்த்தமில்லை”

இவ்வாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் பத்திகைகளின் ஆசிரியர்களை இன்று காலை அலரிமாளிகையில் சந்தித்தார். அதன்போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான், பந்துல குணவர்தன, சி.பி.ரத்நாயக்க, இராஜங்க அமைச்சர்கள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்ததாவது:

தமிழ் ஊடகங்கள் மிகவும் பொறுப்பாக செயற்படவேண்டும். அரசையும் மக்களையும் ஊடகங்கள் விரோதப்படுத்தக் கூடாது. ஊடகங்கள் உண்மையான விமர்சனங்களை வெளிக்கொணர வேண்டும். தமிழ் மக்கள் எமக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அவர்களுக்கான எமது சேவைகள் தொடரும்.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை இந்தியா தர வேண்டும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் எனக்கு உடன்பாடில்லை. தீர்வு எம்மிடமே உள்ளது. அதைவிடுத்து தீர்வை வெளியில் தேடுவதில் அர்த்தமில்லை. நாம் எமது பிரச்சினைகளை ஒன்றுபட்டு தீர்க்க வேண்டும். அவற்றை தொடரவிடுவதில் அர்த்தமில்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆராயப்படுகிறது. இது தொடர்பில் அறிக்கையொன்று நீதி அமைச்சிடம் கோரப்பட்டுள்ளது.அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆராயப்படும். தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலருக்கு பாரதூரமான குற்றங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் நாங்கள் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களையும் ஆராய்ந்து விடுதலை தொடர்பில் தீர்மானம் எடுப்போம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் இன்று பேசப்படவுள்ளது.ஏற்கனவே ஜனாதிபதி அது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.விரைவில் அது தொடர்பில் நல்ல பதில் அறிவிக்கப்படும்.கம்பனிகளுடனும் இதுபற்றி பேசப்பட்டுள்ளது.

தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது என்று எந்த தடையும் அரசு விதிக்கவில்லை. அரசில் உள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் அது தொடர்பில் கருது வெளியிட்டிருந்தால் அது அவர்களின் கருத்தாக இருக்குமே தவிர, அது அரசின் கருத்தாக இருக்காது. அப்படியொரு நிலைப்பாட்டை அரசு எடுக்கவில்லை. ஆனால் சிங்கப்பூர், கனடா, இந்தியா போன்ற நாடுகளை போல தேசிய கீதம் ஒரு மொழியில் இருக்கலாம்.

அதேசமயம் இங்கு நான் ஒரு தமிழ் பாடசாலைக்கு போனால் அங்கு தமிழில் தேசிய கீதம் பாடுகிறார்கள். தென்பகுதியில் நிகழ்வுகளுக்கு சென்றால் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்படுகிறது. பிரதேச ரீதியாக இவை நடைமுறையில் உள்ளன.ஆனால் யாரும் அதனை தடை செய்யவில்லை.தேசிய கீதம் தமிழில் பாடவேண்டுமென சொல்லப்படுவது அரசியல் தேவைகளுக்காகவே என்பதே உண்மை.

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்தியப் பயணத்தின் போது நான் பேசவுள்ளேன். அதேசமயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இம்மாத இறுதியில் இதுபற்றி பேச்சு நடத்தவுள்ளார். உண்மையில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பால் இலங்கை மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுபற்றி பேச்சு நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அரசில் முஸ்லிம் அமைச்சர் எவரும் இல்லாதது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது, “முஸ்லிம் பிரதிநிதிகளை அனுப்பி அந்த நிலையை சரிசெய்ய முஸ்லிம் மக்கள் வரும் தேர்தல்களில் சிந்தித்து செயற்படவேண்டும்” என்று மகிந்த பதிலளித்தார்.

கடந்தமுறை சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடிவு செய்து பெயர்களை அனுப்புமாறு நாம் கேட்டோம். ஆனால் அவர்கள் பெயர்களை அனுப்பவில்லை. பைசர் முஸ்தபாவுக்கு அமைச்சுப் பொறுப்பை ஏற்க கோரினோம்.அவர் மறுத்துவிட்டார். ஆனாலும் அடுத்தமுறை தேர்தலில் முஸ்லிம் மக்கள் அதனை சரிசெய்யவேண்டும் ” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உங்களின் நிலைப்பாடென்ன என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,

“நாம் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றோம். ஆனால் பல தசாப்த காலமாக தமிழர்களை அவர்களது அரசியல் தலைவர்கள் ஏமாற்றியதுபோன்று ஏமாற்ற நாம் தயாராக இல்லை” என்று பிரதமர் கூறினார்.

ஜெனிவாவின் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது , “எமது நட்பு நாடுகளுடன் இணைந்து அதனை எதிர்கொள்வோம். இலங்கையில் தேர்தலொன்று வரவுள்ள சூழ்நிலையில் எவ்வாறாயினும் இம்மாதம் மார்ச்சில் இடம்பெறவுள்ள அமர்வில் இலங்கைக்கு எவ்வித சவால்களும் இல்லை” என்ற பிரதமர் குறிப்பிட்டார்.