பகிடிவதையால் இடைவிலகிய மாணவர்களுக்கு மீளவும் பல்கலை. அனுமதி – உயர்கல்வி அமைச்சர் தெரிவிப்பு

0

பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்று முதுநிலை மாணவர்களின் பகிடிவதை துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு இடை விலகிய மாணவர்களை மீளவும் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் முதுநிலை மாணவர்களால் வழங்கப்படும் “பகிடிவதை” துன்புறுத்தல்களால் படிப்பைக் கைவிட்டு வெளியேறியிருக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரம் மாணவர்கள் பகிடிவதை காரணமாக பல்கலைகழக படிப்பைக் கைவிட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு எமக்குத் தகவல் வழங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் அவர்கள் பகிடிவதை காரணமாக உடல் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு வெளியேறியுள்ளனர். சிலர் தமது உயிரை மாய்த்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றுள்ளனர்.

சிலர் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறார்கள். மற்றவர்கள் வாழ்க்கையில் தங்கள் வழியை இழக்கிறார்கள்.

எனவே பகிடிவதையால் பாதிக்கப்பட்டு பல்கலைக்கழக கல்வியை இழந்தவர்களின் தகவல்களைச் சேகரிக்க ஆணைக்குழு ஒன்றை அரசு அமைக்கவுள்ளது.

அந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வியைத் தொடர அனுமதி வழங்கப்படும் – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here