ரஞ்சன் எம்.பியுடன் உரையாடல்; மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பல்பிட்டிய குறித்து ஜனாதிபதிக்கு பரிந்துரை: நீதிவான் தம்மிக்க பதவி இடைநீக்கம் – நீ.சே.ஆ. தீர்மானம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலாபிட்டி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளது நீதிச் சேவைகள் ஆணைக்குழு.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்ட நீதிவான் தம்மிகா ஹேமபாலாவை சேவையிலிருந்து இடைநீக்கம் செய்து நீதிச் சேவைகள் ஆணைக்குழு பணித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்று ஒய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என்.ரணவக்க, மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலாபிட்டி மற்றும் பத்தேகம நீதிமன்ற நீதிவான் தம்மிகா ஹேமபாலா ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர்களது உரையாடல் ஒலிப்பதிவு இறுவெட்டுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான இல்லத்திலிருந்து பொலிஸார் மீட்டிருந்தனர்.

இந்த நிலையில் அந்த இறுவெட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

நீதித் துறை மீது தேவையற்ற வகையில் தலையீடு செய்தார் என்ற குற்றச்சாட்டில் சட்ட மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு நுகேகொட நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவரை வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் அனுமதியளித்தார்.

அத்துடன், ஒய்வுநிலை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என்.ரணவக்க, மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலாபிட்டி மற்றும் பத்தேகம நீதிமன்ற நீதிவான் தம்மிகா ஹேமபாலா ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள சட்ட மா அதிபர், கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸாருக்கு இன்று பணிப்புரை வழங்கினார்.

இந்த நிலையில் நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய பிரதம நீதியரசர் சந்திரசிறி ஜயந்த ஜயசூர்ய தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழு இன்று கூடியது.

அதன்போது, மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என்.ரணவக்க சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளதால் அவர் தொடர்பான நடவடிக்கையை சட்ட மா அதிபர் முன்னெடுப்பார் என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் பிலாபிட்டி தொடர்பில் நியமன அதிகாரியான ஜனாதிபதியே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் அவரது சேவை தொடர்பான பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்தது.

அத்துடன், குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள பத்தேகம நீதிமன்ற நீதிவான் தம்மிகா ஹேமபாலாவை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்ய நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு ஆணைக்குழு பணிப்புரை வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here