தமிழர்களின் காணிகளை சுவீகரித்து மீள்குடியமரவேண்டிய தேவை முஸ்லிகளுக்கு இல்லை – முஸ்லிம் பேரவை தெரிவிப்பு

0

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெடுங்குளத்தில் முஸ்லிம் மக்களுக்கு வழங்குவதற்கு என 300 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக சில தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளமையை யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் பேரவை கண்டித்துள்ளது.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை நெடுங்குளம் பகுதியில் பொது மக்களின் காணிகளை அரசு சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகளை நில அளவைகள் திணைக்களத்தினர் நேற்று முன்னெடுக்க முயற்சித்தனர். எனினும் அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலர் இணைந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனை போது அந்தக் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீட்டுக்குச் சென்ற யாழ்ப்பாண நில அளவைத் திணைக்களத்தினர் காணிகளை அளவீடு செய்யாமல் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

“இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது கலந்து கொண்ட சில அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களினால் குறித்த காணிகள் சுவீகரிக்கப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

யாழ்.முஸ்லிம்களாகிய நாம் எந்தக் காலத்திலும் சகோதர இனமாகிய தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து எமக்கு வழங்குமாறு கோரப்போவதில்லை. எனவே தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான இன ஒற்றுமையை குலைக்கும் முயற்சியில் சிலர் இறங்கி உள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்கள் எந்தக் காலத்திலும் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து அந்தக் காணிகளில் வீடுகள் கட்ட வேண்டிய அவசியம் இல்லை.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களை சட்டபூர்வமாக மீள்குடியேற்றுமாறே நாம் கோரி வருகின்றோம்” யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.