யாழ்.மாவட்டத்தில் 689 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க 870 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

0

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் முன்மொழியப்பட 689 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக கோரப்பட்ட 870 மில்லியன் ரூபாய் நிதியில் ஒருபகுதியான 174 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மக்களால் முன்மொழியப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கான இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால் அவற்றை ஆரம்பிக்குமாறு நிதி அமைச்சின் செயலாளரால், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசால் கொண்டுவரப்பட்ட சப்ரி கமக் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட 435 கிராம அலுவலகர் பிரிவுகளில் முன்னுரிமை அடிப்படையில் மக்களால் கோரப்பட்ட 689 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் மக்களால் முன்மொழியப்பட்டன.

இதில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 9, வேலணை பிரதேச செயலர் பிரிவில் 48, ஊர்காவற்றுறையில் 26, காரைநகரில் 10, யாழ்ப்பாணத்தில் 48, நல்லூரில் 77, சண்டிலிப்பாயில் 35, சங்கானையில் 37, உடுவிலில் 60, தெல்லிப்பளையில் 64, கோப்பாயில் 54, சாவகச்சேரியில் 79, கரவெட்டியில் 57, பருத்தித்துறையில் 55, மருதங்கேணியில் 30 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்குமாறும் வேலைகளின் முன்னேற்ற அறிக்கைக்கு அமைய மிகுதி நிதி விடுவிக்கப்படும் என்றும் நிதி அமைச்சின் செயலாளரால் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகனுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.