வடக்கு – கிழக்கில் 28 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு

0

வடக்கு – கிழக்கில் 28 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டத்தை சமூக வலுவூட்டல் அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக 7 ஆயிரம் வீடுகளை அமைத்து பயனாளிகளுக்கு வழங்க திறைசேரி அனுமதியளித்துள்ளது.

12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தில் மாதிரி வீடு பதுளையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

வீட்டத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

புதிய அரசு பதவிக்கு வந்த பின் அமைச்சரவையில் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சுக்குரிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. அதனால் சமூக வலுவூட்டல் அமைச்சு, வடக்கு – கிழக்கில் 28 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக 7ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான ஒப்புதலை திறைசேரி வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 3 ஆயிரம் வீடுகளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கான மாதிரி வீடு பதுளையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மேலும் பிரதேச செயலர்கள் ஊடாக இந்தத் திட்டத்துக்கு பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். போரால் பாதிக்கப்பட்டு அண்மையில் மீள்குடியமர்ந்தவர்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.