100,000 இளையோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் செயலணியின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி நியமனம்

0

ஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சுவீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தை நிறைவேற்றும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்வ ஆரச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்வின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கமைய வறுமையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் எண்ணக்கருவின் கீழ் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி அமைக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பேண்தகு முதன்மை உபாயமார்க்கமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குறைந்த கல்வித் தகைமை உடையவர்களுக்கு முறையான தொழிற்பயிற்சியை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் அவர்களுக்கு அரச துறையில் நிரந்தர வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பது இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்வஆரச்சி பதில்கடமை இராணுவ தளபதியாக 2007ஆம் ஆண்டில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் இந்தோனேசியாவிற்கான இலங்கை தூதுவராக அவர் 06 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

சட்டமும் ஒழுங்கும் அமைச்சின் ஆரம்பகால செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராகவும் மல்வ ஆரச்சி பணியாற்றியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது – என்றுள்ளது.