சட்ட மா அதிபரின் உத்தரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

0

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டியவை கைது செய்ய சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளமைக்கு எதிராக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று ஒன்றுதிரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பிரபல சிங்கள நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியமை தொடர்பில் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டிய சேவையிலிருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டியவைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த சட்ட மா அதிபர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு நேற்றுமுன்தினம் அறிவுறுத்தல் வழங்கினார்.

எனினும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டியவைக் கைது செய்வது தொடர்பிலும் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தலைமையில் மூன்று மூத்த பிரதிப் பொலிஸ் பொலிஸ் மா அதிபர்கள் அடங்கலாக ஐவர் கொண்ட பொலிஸ் குழுவை பதில் பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார்.

இந்த நிலையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலாபிட்டியவை கைது செய்ய சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளமைக்கு எதிராக சட்டத்தரணிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“கொழும்பு நீதிமன்ற பிரதான நீதிவானாக இருந்தபோது பிலாபிட்டியா நீதிக்கு ஒரு சிறந்த சேவையை வழங்கியிருந்தார். மேலும் அவர் ஒரு நியாயமான மற்றும் மிகவும் திறமையான நீதிபதியாகக் காணப்பட்டார்.

சட்ட மா அதிபர் டப்புலா டி லிவேரா, ஆதாரங்களைத் தயாரிக்க உதவியது, மற்றும் ஒரு குற்றச்செயலை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை நீதிபதி பிலபிட்டியவுக்கு எதிராக முன்வைத்துள்ளார்” என்று ஜனாதிபதி சட்டத்தரணி நெல்சன் டீ சில்வா தெரிவித்தார்.

சட்டத்தரணிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்ட மா அதிபரை கடுமையாகத் தாக்கிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் காணப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here