கோரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம்: சீனாவில் உயிரிழப்பு 56 ஆக அதிகரிப்பு; 2,000 பேர் பாதிப்பு

0

சீனாவை உலுக்கி வரும் கோரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. அங்கு உயிர்க்கொல்லி வைரஸுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர் என சீன தேசிய மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

“கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டோரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2ஆயிரமாக உயர்ந்துவிட்டது” என்று சீன மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கோரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.

சீனாவில் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் அந்த நாட்டு மக்களைக் கொண்டாட்டத்தில் விடாமல் கோரோனா வைரஸ் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரம்பேர் வரை கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதில் 300-க்கும் மேற்பட்டோர் நிலமை கவலைக்கிடமாக இருக்கிறது.

சீனாவில் இருந்து பரவிய இந்த வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. பிரான்ஸில் 2 பேரும் ஆஸ்திரேலியா (1), தாய்லாந்து (4), ஜப்பான் (2), தென் கொரியா (2), அமெரி்க்கா (2), வியட்நாம் (2), சிங்கப்பூர் (3), நேபாளம் (1), ஹாங்காங் (5), மாக்காவ் (2), தைவான் (3) ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய வுஹான் நகரம் உள்ளிட்ட 17 நகரங்களுக்குப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்த 17 நகரங்களில்தான் பெரும்பாலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற நகரங்களிலும் இந்த பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளார்கள்.

ஹூபி மாநிலத்தில் மட்டும் 325 பேர் புதிதாக கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அங்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜின்குவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.சீனாவின் மிகப்பெரிய நகரான ஷாங்காய் நகரில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சார்ஸ் வைரஸ் போன்று கோரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், சீன அரசு பாதுகாப்பு அவசரநிலையை அறிவிக்க இருக்கிறது. இதற்காக அடுத்த 10 நாள்களில் ஆயிரத்து 300 பேருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனையைக் கட்ட உள்ளது. வுஹான் மாநிலத்திலும் அடுத்த 15 நாள்களில் 1000 பேர் சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனையைக் கட்ட உள்ளது.

சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் ” புதிய கோரோனா வைரஸ் நாட்டில் வேகமாகப் பரவிவருகிறது, நாடு கொடுமையான சூழலை எதிர்கொண்டிருக்கிறது. நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், ஒன்றிணைந்து பணியாற்றவேண்டும், தடுப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும், ” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த கோரோனா வைரஸ் சீனாவில் இதுவரை 30 மாநிலங்களில் பரவியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 18 நகரங்களுக்கு யாரும் செல்லக்கூடாது, எந்த வாகனங்களும் இயக்கக்கூடாது என்று சீனா போக்குவரத்து தடையைக் கொண்டு வந்துள்ளது. இதனால் 110 கோடிக்கும் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.