யாழ். பல்கலை. செய்திகள் எவ்வாறு விரைவாகக் கிடைக்கின்றன? செய்திமூலத்தை கோரி முதல்வனுக்கு பதிவாளர் கடிதம்

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தொடர்பான செய்திகளை முதல்வன் உடனுக்குடன் வெளியிட்டு வரும் நிலையில் அவை கிடைக்கும் தகவல்மூலங்களை வழங்குமாறு பல்கலைக்கழக பதிவாளரால் இன்று கடிதம் மூலம் கோரப்பட்டது.

அந்தக் கடிதத்தின் விவரம்

முதல்வன் ஆசிரியரின் பதில்

பதிவாளர்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

தங்களின் கடிதத்துக்கான பதில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் ஒருவருக்கு மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று முதல்வனில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் அதன் மூலத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுள்ளீர்கள்.

இந்த தடை உத்தரவு கடிதம் அச்சிடப்பட்டு, கையொப்பமிடுவதற்கு முன்னரே முதல்வனில் செய்தி வெளிவந்திருந்தது என்றும் அதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இடையே அதிருப்தி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளீர்கள்.
தடை உத்தரவுக்கான தீர்மானம் எடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ள தாங்கள், அதுபற்றிய உத்தரவுக் கடிதம் வழங்கப்பட முன்னர் செய்தி வெளிவந்தமையே நிர்வாகத்தை அதிருப்திக்குள் உள்ளாக்கியது என்பதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் க.கந்தசாமி அவர்களுக்கு உயர் கல்வி அமைச்சரால் நியமனக் கடிதம் வழங்கப்படுவதற்கு அல்லது பொது அறிவித்தலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் முதல்வன் செய்தி வெளியிட்டிருந்தான்.

அவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தொடர்பாக இதுவரை காலமும் முதல்வனில் வெளிவந்த எந்தச் செய்தி அல்லது கட்டுரைகளும் உண்மைக்குப் புறம்பானவை அல்ல. அதனால் பல்கலைக்கழகத்துக்கு எந்த அபகீர்த்தியும் ஏற்படுத்தப்படவில்லை. எமது சொத்தான பல்கலைக்கழகத்துக்கோ அல்லது அதன் நிர்வாகக் கட்டமைப்புக்கோ அபகீர்த்தி ஏற்படுத்தும் எந்தவொரு நிலைப்பாடும் முதல்வனிடம் இல்லை.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பது ஒரு பொது நிறுவனம். அதன் நிர்வாகம் சார்ந்து “ஒளித்துப் பிடித்து” விளையாடுவதற்கு தனியுரிமை கொண்டதொன்றல்ல. மாறாக பொது நிறுவனம் ஒன்று வெளிப்படைத் தன்மையுடன் இயங்க வேண்டிய கடப்பாடும், அதன் வெளிப்படைத் தன்மையை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய சமூகக் கடப்பாடு காரணமாகவே பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரது செய்திகளையும் முதல்வன் உடனுக்குடன் வெளியிட்டு வருகின்றான்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, அரச நிர்வாக மட்டங்களால் பல்கலைக்கழகத்தின் தனித்துவத்துக்கு சவால் விடும் வகையிலான சந்தர்ப்பங்கள் ஏற்றபடுத்தப்பட்ட போது, அவை வெளியுலகுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்ற நோக்கத்திலேயே அத்தனை விடயங்களும் வெளிக் கொண்டுவரப்பட்டன.

ஒரு செய்தியை இரண்டுக்கு மேற்பட்டவர்களிடம் உறுதி செய்த பின்னரே முதல்வன் வெளியிட்டு வருகிறான். அதுபோலவே இன்று வெளியிடப்பட்ட மாணவர் ஒருவருக்கெதிராக உள்நுழைவதற்கான தடையுத்தரவு செய்தியும் அமைந்திருந்தது. அந்தத் தடை உத்தரவை நேற்றைய கூட்டத்திலேயே பெண் ஆசிரியர் ஒருவர் கோரிய போதும் முதற்கட்ட விசாரணை நிறைவடையும் வரை தீர்மானம் எடுக்க முடியாது என்று தகுதி வாய்ந்த அதிகாரியால் கூறப்பட்டதையும் முதல்வன் அறிவான்.

எனினும் மாணவனுக்கு உள்நுழைவதற்கு தடை வழங்கப்படும் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னரே முதல்வன் செய்தியை வெளியிட்டிருந்தான்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பொது வெளியில் இயங்கும் சமூக நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் அறிவதில் பொது மக்கள் கரிசனை கொண்டிருப்பர். எனவே பொது மக்களுக்கு செய்திகளை வெளிப்படுத்துவது மக்கள் ஊடகத்தின் கடமையாகும்.

அத்துடன், ஊடகத்தில் வெளியாகிய செய்தி தொடர்பான மூலத்தை அதனிடம் அறிந்துகொள்ள முற்படுவதும் அதனை ஊடக நிறுவனம் வெளிப்படுத்துவதும் ஊடக அறம் கிடையாது.

எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டால் அதுதொடர்பான மூலத்தை வெளிப்படுத்துமாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறையூடாக கோருமிடத்து முதல்வன் வழங்குவான்.

முதல்வனிடம் இந்த பதிலைப் பெற்றுக்கொள்ளுமாறு தகுதி வாய்ந்த அதிகாரி தங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அவரது கல்விப் புலமைக்கும் அனுபவத்துக்கும் பதில் கூறும் அளவுக்கு முதல்வனின் ஆசிரியர் சிறியவனாக உள்ளார். எனினும் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிடாதவன் என்ற வகையில் செய்திமூலங்களை வெளிப்படுத்துவது ஊடகம் அறம் இல்லை என்ற அடிப்படையில் ஒருபோதுமே அவற்றை வெளிப்படுத்தப்படமாட்டேன்.

தங்களிடம் செய்தியை உறுதிப்படுத்துமாறு கூறியுள்ளமையையும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது தங்களுக்கு நன்றாகவே தெரிந்த விடயம். உறுதிப்படுத்துவதற்கு தாங்கள் தயாரில்லை என்பதையும் முதல்வன் அறிவான்.

ஆசிரியர்,
முதல்வன்.