காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இடைக்கால அறிக்கை வழங்கும் பணி ஆரம்பம்

0

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் அவரது உறவினர்களுக்கு இடைக்கால அறிக்கையாக காணப்படாமைக்கான சான்றிதழ் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று காணாமற்போனோர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த இடைக்கால அறிக்கையைப் பயன்படுத்தி நலன்புரித் திட்டங்களின் கீழ் உதவிகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பதற்கும், மாவட்ட நீதிமன்றம் ஊடாக காணாமற்போன நபரிக்கு உரித்தான ஆதனங்கள் அல்லது சொத்துக்களை தற்காலிகமாகப் பராமரித்தல், காணாமற்போன ஆளினது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாவலர்களாக இருப்பதற்கும், அதிகார சபைகள் அல்லது நீதிமன்றங்களில் காணாமற்போன ஆளினை பிரதிநிதிப்படுத்துவதற்கும் முடியும் என்று காணாமற்போனோர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

“இடைக்கால அறிக்கையைப் பெற்றுக்கொள்ள விரும்பும் உறவினர்கள், காணாமற்போனோர் அலுவலகத்திலிருந்து பெறும் விதந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை முழுமைப்படுத்தி அந்த அலுவலகத்துக்கு சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பமானது உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களைக் கொண்டிருக்கவேண்டும்.

ஆவணங்களை மதிப்பிடுவதற்கும் வாய்மூல சாட்சியங்களை கருத்திற்கொள்வதற்குமான விசாரணையைத் தொடர்ந்து இடைக்கால அறிக்கை வழங்கப்படும்” என்று காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாளிய பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.