கோரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய்க்கு Covid-19 என பெயரிடப்பட்டது

0

புதிய கோரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய்த் தாக்கத்திற்கு Covid-19 (C-O-V-I-D hyphen one nine – COVID-19) என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

கோரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டி, தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தொட்டுள்ள நிலையிலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இயலுமானளவு தீவிரமாக செயற்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, இந்த வலியுறுத்தலையும் புதிய பெயர் அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

வைரஸ்களுக்கும் நோய்த் தாக்கத்திற்கும் இடையில் ஏற்படக்கூடிய குழப்பங்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு, கோரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் நோய்த் தாக்கத்திற்கு உத்தியோகபூர்வ பெயரிடுமாறு ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.