சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம; அரசின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்

0
??????

நகர சபை வழங்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்னால் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்கொண்டாட்டமானது வெள்ளிக்கிழமை(14) மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அதனை சீர் செய்யும் முகமாக கல்முனை போக்குவரத்து பொலிஸார் கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இங்கு கூடியுள்ள மக்கள் திரளாக கூடி பாதசாரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றதுடன் வெடிகளும் கொளுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபையிலிருந்து பிரிந்து புதிதாக உதயமாகின்ற சாய்ந்தமருது நகர சபை குறித்து பின்வருமாறு மக்கள் தத்தமது கருத்துக்களை ஊடகங்களிடம் வெளிப்படுத்தினர்.

சாய்ந்தமருது மக்கள் கல்முனையிலிருந்து பிரிந்து செல்வதற்கு பல காரணங்கள் உள்ளன.சில தரப்பிடம் காணப்பட்ட பிரதேசவாதம் மற்றும் கல்முனைக்குடி முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் புறக்கணிப்பு கல்முனை மாநகர சபை முதல்வராக சாய்ந்தமருது சேர்ந்தவர்களை நியமிப்பதில் தடை போன்றவற்றால் சாய்ந்தமருது மாளிகைக்காடு உள்ளடக்கிய பகுதியையும் காரைதீவு எல்லையாக கொண்ட பகுதி சாய்ந்தமருது நகர சபை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இது அம்மக்களின் நீண்டகால பிரச்சினையாகவும் இதே நேரம் கல்முனை தேர்தல் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் சரிவை எதிர்நோக்கியுள்ளன. சாய்ந்த மருதுமக்களிடையே இச்சபை செயற்பாட்டை செயலுருவாக்கிய தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவின் கை ஓங்கியுள்ளதை மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறினார்கள்.

இது கல்முனையில் இருந்து சாய்ந்தமருது பிரிந்து செல்வதால் தமிழ்மக்கள் சந்தோசப்படுவதை விட ஒரு நீண்ட காலமாக மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக அவர்கள் பார்க்கின்றார்கள்.

சாய்ந்த மருதுமக்களை போன்றே கல்முனையில் தனிப் பிரதேசம் கேட்கவில்லையாயினும் நிர்வாக ரீதியில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என அழைக்கப்படும் தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்வு நீண்டகால பிரச்சினையாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கல்முனைச் செய்தியாளர் – பாறுக் ஷிஹான்