நிதி மோசடிக் குற்றச்சாட்டு; நாடு திரும்பிய உதய வீரதுங்க சிஐடியால் கைது

0

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, இன்று காலை நாடு திரும்பிய நிலையில் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

2006ஆம் ஆண்டு உக்ரேனிடம் இருந்து, நான்கு மிக் 27 போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான வழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தொம்பேயில், 40 மில்லியன் ரூபா பெறுமதியான 8 ஏக்கர் நிலம், 25 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு ஏக்கர் நிலம், பொரளையில் 29 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு என்பன உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமாக இருப்பது கண்டறியப்பட்டாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 2018ஆம் ஆண்டு நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு குற்ற விசாரணைப் பிரிவுடன் இணைக்கப்பட்டது.

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவரை குற்ற விசாரணை பிரிவின் விசாரணைக்குட்படுத்தினர். விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.