மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகனுக்கு சேவை நலன் பாராட்டு விழா

0

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், அரச சேவையிலிருந்து ஓய்வுபெறுவதையடுத்து சேவை நலன் பாராட்டு விழா இன்று நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த விழா இன்று பெப்.14 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தமது பாரியாருடன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் 2015ஆம் ஆண்டு முதல் இன்று வரை யாழ்ப்பாண மாவட்டத்தின் செயலாளராக கடமையாற்றிய நாகலிங்கம் வேதநாயகனுக்கு கௌரவிப்பு நிகழ்வும் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை நிர்வாக சேவையில் அதிசிறப்புத் தரத்தைக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன், போரின் போது கிளிநொச்சி மாவட்ட செயலாளராகக் கடமையாற்றியதுடன், இறுதிப் போரின் பின்னர் தடுப்பில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.