கோரோனா வைரஸால் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாவு

0

கோரோனா வைரஸ் பாதிப்புக்கு உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாவது;

உலகம் முழுவதும் கோரோனா (COVID-19) தொற்றுக்கு 10 ஆயிரத்து 405 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 80 ஆயிரம் பேர் கோவிட் -19 காய்ச்சலிருந்து மீண்டுள்ளனர்- என்று தெரிவித்துள்ளது.

இனி வரும் நாள்களில் கோவிட் வைரஸின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக, இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், இத்தாலியில் வைரஸைக் கட்டுப்படுத்த பொதுக் கூட்டங்களுக்குத் தடை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருத்துவப் பொருள்கள் தவிர்த்து பிற பொருள்களுக்கு இத்தாலி அரசு வர்த்தகத் தடை விதித்துள்ளது.