சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகள் தொடர்பில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன

0

சமூக வலைத்தளங்களில் மற்றும் உடனடி தகவல் சேவைகளாக வைபர், வட்ஸ்அப் செயலிகளில் வெளியிடப்படும் போலிச் செய்திகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

“சமூக வலைத்தளங்களான முகநூல், இணையத்தளங்கள் மற்றும் உடனடி தகவல் சேவைகளாக வைபர், வட்ஸ்அப், மெசெஞ்ஜர் உள்ளிட்ட செயலிகளில் கோரானா வைரஸ் தொற்றுத் தொடர்பிலும் அவற்றோடு தொடர்புடைய விடயங்களையும் உண்மைக்குமாறாக புனையப்பட்டு தொடர்ச்சியாக பல செய்திகள் வெளியிடப்படுகின்றன.

அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் கோரோனா நோய் தொற்றால் 10 பேர் உயிரிழந்துள்ளனரென, உண்மைக்குப்புறம்பான தகவல்களை முகநூலில் ( பேஸ்புக்கில்) வெளியிட்ட தனியார் பல்கலைக்கழகமொன்றின் நிர்வாக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரியொருவரே குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக பிரதி பொலிஸ் மாதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திசாநாக்க முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். அவரை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.