யாழ்ப்பாணத்திலிருந்து 8 லொறிகளில் மரக்கறி வகைகள் தம்புள்ளைக்கு அனுப்பிவைப்பு – அங்கஜன் தெரிவிப்பு

0

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து 8 பாரவூர்திகளில் வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்ட விவசாயிகளின் உற்பத்திப் பொருள்கள் இன்று அனுப்பிவைக்கப்பட்டன என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவித்ததாவது;

நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதும் விவசாயிகள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விவசாய உற்பத்திகளை ஏனைய மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்தவதற்கு விவசாய அமைச்சர் சமால் ராஜபக்சவால் உரிய அறிவுறுத்தல்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட கமக்கார அமைப்புக்களின் அதிகார சபைத் தலைவர் கந்தையா தியாகலிங்கம் ஊடாக யாழ்ப்பாணம் விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களின் உற்பத்திகள் இன்று காலை 2 பாரவூர்திகளிலும் மாலை 6 பாரவூர்திகளிலும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

வெங்காயம், உருளைக்கிழங்கு, பீற்றூட், கறிமிளகாய், பச்சை மிளகாய் உள்ளிட்டவை ஒரு பாரவூர்தியில் தலா 15 ஆயிரம் கிலோ கிராம் வீதம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவை சுன்னாகம், சங்கானை, அச்சுவேலி, புத்தூர் உள்ளிட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டவை.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று காலை முதல் நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு மரக்கறி வகைகளை விநியோகித்து வருகிறது. அதனால் யாழ்ப்பாணம் விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நல்லதொரு கேள்வி ஏற்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் தமது வாடிக்கையான பாரவூர்திகள் மூலம் விவசாய உற்பத்திகளை பாதிப்பு இல்லாமல் வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் – என்றார்.

இதேவேளை, விவசாயிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக விவசாய அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள நடைமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் காலத்தில் அத்தியாவசிய மற்றும் மிருக வளர்ப்பு நடவடிக்கைகள் தடையின்றி நடைபெற வேண்டியுள்ளது .

ஊரடங்கு நடைமுறையில் இல்லாத காலத்தில் விவசாய அமைப்புக்களால் தமது உற்பத்திகள் விவசாய சேவை மத்திய நிலையங்கள், சதொச வர்த்தக நிலையங்கள், மகாவலி காரியாலயங்கள் மற்றும் கோட்டக் காரியாலயங்களிலூடாக தேவையான வர்த்தக நிலையங்களிற்கு வழங்கி நுகர்வோர் கொள்வனவு செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நேரங்களில் வியாபாரிகள் தமது உற்பத்திகளை விற்பதற்கு இடவசதிகள் செய்து தருவதற்கு கன்ணோருவ விவசாய நிலையம் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது . அதற்காக பணிப்பாளர் ( தேசிய விவசாயத் தகவல் மத்திய நிலையம் ) எஸ். பெரியசாமியைத் ( தொ. இ 0714157585 ) தொடர்பு கொண்டு தேவையானவற்றைச் செய்து கொள்ளல் வேண்டும். நுகர்வோர் அவ்விடத்தில் பொருள்களைக் கொள்வனவு செய்யலாம்.

அதேபோல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நேரத்தில் விவசாயச் செயற்பாடுகளுக்குத் தேவையான இரசாயன மற்றும் காபன் உர வகைகள், விதை மற்றும் இரசாயனப் பொருள்களைத் தடையின்றி எடுத்துச் செல்வதற்கும் களஞ்சியப்படுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரங்களில் தங்களது பிரதேசத்திலுள்ள விவசாய சங்கங்களில் அல்லது விற்பனை நிலையங்களில் வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .

சகல நெல் கொள்வனவு மத்திய நிலையங்களும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் திறந்து வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது . எனவே தமது உற்பத்திகளை அங்கே எடுத்துச் சென்று விற்பனை செய்ய முடியும் – என்றுள்ளது.