வடக்கில் வெள்ளியன்று ஊரடங்கு 6 மணிநேரம் தளர்வு- அபாய வலயத்தில் மறு அறிவித்தல் வரை தளர்வில்லை

0

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் நணபகல் 12 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களான அபாய வலயத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தளர்த்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய 16 மாவட்டங்களில் நாளைக் காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு நண்பகல் 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
நாடுமுழுவதும் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுதல் மற்றும் மீண்டும் நடைமுறைப்படுத்தல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்.

  1. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரை நடைமுறையில் இருக்கும்.
  2. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச் 27 வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
  3. ஏனைய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (26) வியாழன் காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணம்செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் எந்த மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும், சிறு தேயிலை தோட்ட, ஏற்றுமதி பயிர் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊடக சேவைக்காகவும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணிகளுக்காக விமான நிலையங்களுக்கும் துறைமுக சேவைகளையும் பேணுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here