இந்தியாவில் கோரோனா வேகமாகப் பரவுகிறது; நாடுமுழுவதும் ஊரடங்கு மே 3ஆம் திகதிவரை நீடிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

0

இந்தியாவில் கோரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது என்பதால், அதைக் கட்டுப்படுத்த மே 3-ம் திகதிவரை ஊரடங்கு நாடுமுழுவதும் நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். இதன் மூலம் ஊரடங்கு மேலும் 19 நாள்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

கோரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25ஆம் திகதி முதல்கட்டமாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த 21 நாள்கள் இன்றுடன் முடிகிறது. ஆனாலும் கோரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கடந்தவாரம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலான முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர். பிரதமர் மோடி அறிவிக்கும் முன்பே தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் ஏப்ரல் 30ஆம் திகதிவரை ஊரடங்கை நீட்டித்துள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மக்களுக்கு இன்று 25 நிமிடங்கள் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

கோரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருப்பதை நான் அறிகிறேன். வீட்டுக்குள்ளே இருப்பதாலும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறீர்கள். கோரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஒழுக்கத்தையும், தியாகத்தையும் வெளிப்படுத்தி போர் வீரர்கள் போல் செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு நான் தலை வணங்குகிறேன்.

கோரோனா வைரஸ் நாடுமுழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தவரும் வாரம் மிகவும் முக்கியமானது. வரும் நாள்களில் ஊரடங்கு மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்படும், விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.

வரும் 20-ம் திகதிவரை ஊரடங்கு கடுமையாக்கப்படும். அதன்பின் கோரோனா வைரஸ் பரவல் அதிகம் இல்லாத இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்காக சில தளர்வுகள் செய்யப்படும். அந்த வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நாளை விரிவாக அறிவி்க்கப்படும்.

ஒற்றுமையான அணுகுமுறையால் இந்தியா கோரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருகிறது. கோரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் 21 நாள்கள் ஊரடங்கால் நாம் பெரும் பயனைப் பெற்றுள்ளோம், குறைவான வளங்களுடன் சூழலை சிறப்பாக எதிர்கொண்டோம்

பல மாநிலங்களில் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் புத்தாண்டை வீட்டுக்குள்ளேயே கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

நாம் சமூக விலகல், ஒழுக்கம், மூலம் கோரோனா தொற்றை கட்டுப்படுத்தியுள்ளோம். வரும் நாள்கள் மிகவும் முக்கியமானது, கோரோனா கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கையில் முடக்கம் முக்கியம் என்பதால் வரும் மே 3-ம் திகதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here