அரச ஊழியர்கள் அனைவரும் மே மாத சம்பளத்தில் அரைவாசியை ஓய்வூதிய நிதியத்துக்கு வழங்கினால் நாட்டுக்கு நன்மை – ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்து

0

அனைத்து அரச ஊழியர்களும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்திற்கு (W&OP) ஒப்படைத்தால் மே மாதம் அரசின் செலவு 50 பில்லியன் ரூபாவினால் குறைந்து வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை ஒரு மாதத்தில் 100 பில்லியன் ரூபாவினால் குறைவடையும் என்று ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர கேட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, தனது மே மாதத்திற்கான முழு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியத்திற்கு ஒப்படைப்பதாக அறிவித்து இந்தக் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தான் தன்னார்வமாக அவ்வாறு செய்வது தேசத்தின் அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு நெருக்கடியற்ற வரவு செலவுத்திட்டமொன்று தேவை என்ற காரணத்தினாலாகும் என பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளார்.

அரசின் மாதாந்த சம்பள பட்டியல் 80 பில்லியன் ரூபாவாகும். அதாவது 8 ஆயிரம் கோடி ரூபாவாகும் என பீ.பி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். அரச கூட்டுத்தாபனங்கள், வங்கி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்த்துப் பார்க்கும் போது அது சுமார் 90 பில்லியன் முதல் 100 பில்லியன் வரையாகும்.

கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் வறிய மற்றும் இடர் நிலைக்குள்ளாகியுள்ள மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி வழங்கும் தூரநோக்கு தலைமைத்துவம் ஏனைய நாடுகளைப் பார்க்கிலும் சிறப்பானதாகும். எனவே அவரது முயற்சிக்கு உதவுவதற்காக தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரசக ஊழியர்களும் தமது சம்பளத்தில் அரைவாசியையேனும் தமது தங்கிவாழ்வோருக்கு நன்மை பயக்கும் அரச ஊழியர்களின் விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்திற்கு ஒப்படைத்தால் மே மாதம் அரசின் செலவு 50 பில்லியன் ரூபாவினால் குறைந்து வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை ஒரு மாதத்தில் 100 பில்லியன் ரூபாவினால் குறைவடையும் என பீ.பி ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்- என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here