இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN 1155

நெடுந்தீவில் வெற்றிலைக்கு தடையா? உண்மையில் நடந்தது என்ன?

0

நெடுந்தீவில் பறித்து எரிக்கப்படுகின்றன வெற்றிலை பாக்குகள் என தலையங்கத்தோடு யாழ்ப்பாணம் பிராந்திப் பத்திரிக்கையொன்றில் செய்தி வெளியாகி இருந்தது.

இந்தச் செய்தி தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தரப்பில் இருந்து மறுப்புக்களும் வெளியாகி இருந்தன. உண்மையில் அங்கு என்ன நடந்தது என பல தரப்புக்களிலும் விசாரித்தோம்.

நெடுந்தீவு சுற்றிலும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவுப் பிரதேசமாகும். ஏற்கனவே பிராயணக் கஷ்டம், தொடர்பாடல் பிரச்சினை, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாகவுள்ள பிரதேசமாகவும், எந்த ஒரு கடுமையான நோய் உள்ள நோயாளிகளையும் படகுமூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வருவது வழமையாகும்.
இந்நிலையில் கோரோனா பரவலானது இலங்கையிலும் பரவத்தொடங்கி யாழ்ப்பாணத்தின் சில இடங்களிலும் பரவல் அவதானிக்கப்பட்டு முற்தடுப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று இருந்தன.

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN1156

கடந்த மாதம் மருத்துவ வசதிகள் குறைந்த நெடுந்தீவு போன்ற பகுதிகளிலும் கோரோனா பரவினால் மிகவும் ஆபத்தான நிலையை அடைவோம் என பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார தரப்புக்களால் எச்சரிக்கப்பட்டதனை அடுத்து சில முற்தடுப்பு நடவடிக்கைகள் நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் பொது அமைப்புகளினால் இணைந்து மேற்கொள்ளப்பட்டன.

அதில் ஒரு கட்டமாக நெடுந்தீவில் உள்ள 26 வரையான பெரிய, சிறிய வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கும் சுகாதாரத் துறையினர், பிரதேச செயலகம், பிரதேச சபை, பொது அமைப்புக்கள் பங்கேற்ற கூட்டமொன்று கடந்த மாதம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இது ஒரு இடர் காலம். இந்த நிலையில் பொருள்களின் விலையை அதிகரித்து விற்கக் கூடாது. பொதுமக்களுக்கு பொருள்கள் விற்பதனை வியாபாரம் என்பதனையும் தாண்டி சேவையாக செய்யுங்கள் என பிரதேச செயலக தரப்பினரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது

அக்கூட்டத்தின் போது பொதுச் சுகாதார பரிசோதகரின் வேண்டுகோளின் பேரில் வெற்றிலை, பாக்கு விற்பனை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

ஏற்கனவே நெடுந்தீவிலுள்ள சில வட்டாரங்களில் பொதுச் சுகாதார பரிசோதகரின் அவதானத்தின் படி வெற்றிலை பாக்கை மென்று வீதிகளிலும், உள் ஒழுங்கைகளிலும், பொது இடங்களிலும் துப்புகின்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதனையும், அந்த இடங்களில் சிறு பிள்ளைகள் காலில் செருப்பும் இல்லாமல் விளையாடுவதனையும் தகுந்த ஒளிப்பட ஆதாரங்களுடன் பிரதேச செயலக மட்டத்தினருக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

கிராம மக்கள் மட்டுமல்ல நெடுந்தீவில் இருக்கும் பொலிஸ், கடற்படையை சேர்ந்தவர்களும் வெற்றிலை பாக்கு வாங்கி பயன்படுத்துவது வழக்கமாகும்.

அங்குள்ள சுகாதார அதிகாரிகளினால் நிலமையை தெளிவுபடுத்தி கொரோனா அபாயம் நீங்கும் வரை வெற்றிலை பாக்கு விற்பதனை தவிர்க்க முடியுமா என கேட்கப்பட்டது. அதன் போது எந்த ஒரு வர்த்தகரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து வெற்றிலை பாக்கு விற்பதனை நீங்களாகவே சுய தணிக்கைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதனை ஏற்ற விற்பனையாளர்களும் தாங்கள் வெற்றிலை, பாக்கு விற்கவில்லை எனக் கூறி கையொப்பமும் இட்டு சென்றுள்ளனர்.

பாவனையாளர்களினால் நேரடியாக பயன்படுத்தப்படும் வெற்றிலை பாக்கு போன்ற பொருள்கள் நெடுந்தீவுக்கு வெளியில் இருந்து கொண்டு வந்து நெடுந்தீவில் விற்கப்படும் போது கோரோனா தொற்றாளர் யாராவது அதனை கையாண்டிருந்தால் நெடுந்தீவு போன்ற பிரதேசங்களும் கோரோனா அபாய வலயமாகும் நிலை ஏற்படாமலிருக்கவே மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.

இது இவ்வாறிருக்க கடந்த மாதம் 21 ஆம் திகதியன்று ஊரடங்கு நேரம் அத்தியாவசிய தேவைக்காக குறிகட்டுவான் சென்று நெடுந்தீவு இறங்குதுறையில் வந்திறங்கிய அத்தியாவசிய பொருள்கள் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

அதன் போது படகின் டீசல் கொள்கலனின் மேல் இரு மூடைகள் காணப்பட்டுள்ளன. அதன் மேலும் இருவர் அமர்ந்து பிரயாணம் செய்துள்ளனர்.

இந்த வெற்றிலை மூடைகள் யாரால் கொண்டுவரப்பட்டன என பல தடவைகள் அங்கு நேரில் சென்றிருந்த பொதுச் சுகாதார பரிசோதகரினால் வினவப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு படகில் இருந்த எவரிடம் இருந்தும் பதில் இல்லை.
இந்த நிலையில் ஸ்ரீதான் அந்த வெற்றிலை மூடையை வெளியே இருந்த குப்பைக்கூடைக்குள் போட்டுவிட்டு அதனை ஆதாரத்துக்கு படமும் எடுத்துக்கொண்டு பொதுச் சுகாதார பரிசோதகர் வெளியேறியுள்ளார்.

அதனை தொடர்ந்து கடந்த மாதம் முதல் வாரத்தில் நெடுந்தீவில் உள்ள ஒரு சில்லறை விற்பனைக் கடையில் 22 வரையிலான வெற்றிலை கூறுகளை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் அதனை தவிசாளர் முன்னிலையில் அகற்றி வெட்டி புதைத்துள்ளார்.

மக்களின் நலன்கருதி நெடுந்தீவு வர்த்தகர்கள் சுயதணிக்கை அடிப்படையில் வெற்றிலை பாக்கை விற்காமல் இருக்கும் போது, அத்தியாவசிய பொருள்கள் வந்த படகில் ஏற்றி வெற்றிலையை கொண்டு வந்த வியாபாரியின் நோக்கம் கொள்ளை இலாபம் பார்ப்பதை விட வேறென்னவாக இருக்கும்.

நெடுந்தீவை கோரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முன்கள தடுப்பு வீரர்களான பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர். நெடுந்தீவு பிரதேச சபையினால் இயக்கப்படும் நெடுந்தாரகை படகு இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைக்காக இயக்கப்படும் குமுதினி படகில் வெளியில் சென்று வருவோரின் கைகள் மாத்திரமல்ல கால்களும் முழுமையாக தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்பே நெடுந்தீவினுள் அனுமதிக்கப்படுகின்றனர். வெற்றிலை பாக்குக்கும் சுயதணிக்கை நடைமுறையில் உள்ளது.

கோரோனா அபாயம் நீங்கும் வரை நெடுந்தீவில் மேற்கொள்ளப்படும் முன்மாதிரியை ஏனைய பிரதேசங்களிலும் பின்பற்றினால் நல்லது.

சுயாதீன ஊடகவியலாளர் – கிரிசாந்த்

இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் BN236

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here