தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருநெல்வேலி அலுவலகம் முற்றுகை; ஒருவர் கைது

0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி நடராஜா காண்டீபனின் அலுவலகத்தில் சுவரொட்டிகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அங்கு பணிபுரியும் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

“திருநெல்வேலியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி நடராஜா காண்டீபனின் அலுவலகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இடம்பெறப் போவதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தது.

அங்கு இராணுவத்தினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். உள்ளே சென்று விசாரணை நடத்தப்பட்ட போது கரும்புலிகள் நாள் நினைவேந்தலை நடத்துவதற்கு தயாரான நிலையில் பந்தங்கள் எண்ணெய்யில் தோய்த்த நிலையில் காணப்பட்டன.

எனினும் சட்டத்தரணி காண்டீபன் சார்பில் கரும்புலிகள் நாள் கடைப்பிடிக்க தயாராக இருக்கவில்லை என அங்கிருந்தவர்கள் உறுதிபடத்தெரிவித்தனர்.

அதனால் அந்த அலுவலகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான தேர்தல் சுவரொட்டிகள் மீ்ட்கப்பட்டன. அவை தொடர்பில் அங்கு பணியாற்றுபவருக்கே தெரியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் பணியாளரான உரும்பிராயைச் சேர்ந்த அஜந்தசேகரன் கைது செய்யப்பட்டார்.

அவர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்படுவர். எனினும் அவர் இன்றிரவே பொலிஸ் பிணையில் விடுவிடுவிக்கப்பட்டார்” என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.