வடக்கில் இராணுவக் குவிப்பின் பின்னணி பற்றி சிறீதரன் எச்சரிக்கை

0

“இன்று வடக்கு மாகாணம் முழுவதும் இராணுவத்தை குவித்து விட்டிருக்கிறது இலங்கை அரசு. இதனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளப் போகும் நெருக்கடிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் எச்சரித்துள்ளார்.

கிளிநொச்சி கல்லாறு மக்களுடனான சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறீதரன் மேலும் தெரிவித்ததாவது;

சாதரணமாக இன்று வட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சி நகருக்கு வருவதற்கு இடையில் 5 சோதனைச்சாவடிகளை தாண்டித்தான் வரவேண்டி இருக்கிறது. இவ்வாறு எமது மாவட்டத்தில் பல இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் புதிதாக முளைத்திருக்கிறது. இவ்வாறு எம்மை தொடர்ந்தும் இராணுவ முற்றுகைக்குள் வைத்து தமிழர்களை அடக்கி ஒடுக்க முயல்கிறார்கள்.

நாடு ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது. 40 ஆண்டுகள் இராணுவ சேவையில் இருந்த ஒரு ஜனாதிபதி நாட்டின் அனைத்து விடயங்களையும் இராணுவத்திடமே ஒப்படைத்து நாட்டை ஆளலாம் என்கிற எண்ணங்களோடு இருக்கிறார்.

தமிழர்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் ஓரணியில் நிற்கிறோம் என்கிற செய்தியை சொல்ல வேண்டும் – என்றார்.

இந்தச் சந்திப்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் கலைவாணி வட்டார அமைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்