முன்பள்ளி பாடசாலைகள் முறைமை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டுவரப்படும் – ஜனாதிபதி உறுதி

0
முன்பள்ளி பாடசாலைகள் முறைமையினை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வந்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார். கடந்த சில தினங்களாக ஜனாதிபதி சுற்றுப் பயணம் மேற்கொண்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்பள்ளி பாடசாலைகளில் ஆசிரியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. சென்ற வியாழக்கிழமை காலியில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போது முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் தமது பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர். இது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருக்கும் முன்பராய அபிவிருத்தி ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமத்துடனும் தரத்துடனும் திட்டமிடப்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். புதிய அரசு அமைக்கப்பட்டதன் பின்னர் முக்கிய பணியாக கருதி முன்பள்ளி பாடசாலைகள் முறைமையை அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (25) மாத்தறை மாவட்டத்திற்குச் சென்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அபேட்சகர் நிபுன ரணவக்க மாத்தறை கடற்கரை பூங்காவில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.