அமெரிக்காவில் கோரோனா உயிரிழப்பு 150,000 கடந்தது: நோய்தொற்றும், சாவும் மீண்டும் அதிகரிக்கும் அச்சம்

0

அமெரிக்காவில் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுதான் உலகிலேயே ஒரு நாடு கோரோனாவில் சந்தித்த மிக அதிகபட்ச உயிரிழப்பாகும் என்று ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் மீண்டும் கோரோனா நோய்த்தொற்று அதிகரிக்கத்தொடங்கி இருப்பதும், உயிரிழப்பு ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து இருப்பதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் மக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமல் தொடர்ந்து வெளியில் நடமாடி வருவது அதிகரித்து வருகிறது.

மதுபான விடுதிகள், ரெஸ்டாரண்ட்கள், ஜிம் போன்றவற்றில் கூடும் அமெரிக்க மக்கள், சமூக விலகலையும், முகக்கவசம் அணியாமல் வருவது அங்கு மீண்டும் கோரோனா பரவல் அதிகரிக்க காரணமாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக டெக்ஸாஸ், ப்ளோரிடா, கலிபோர்னியா போன்ற நகரங்களில் மீண்டும் கோரோனா நோய் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளமை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ப்ளோரிடாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 216 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு 9 ஆயிரத்துக்கும் குறைவாக கோரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் தற்போது 15 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

அதேபோல கலிபோர்னியாவில் நேற்று ஒரேநாளில் 197 பேரும், நேற்று முன்தினம் 157 பேரும் கோரோனாவில் உயிரிழந்தனர். நாள்தோறும் சராசரியாக 9 ஆயிரம் பேர் கோரோனாவில் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெக்சாஸ் நகரில் நேற்று 313 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 6 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல ஜார்ஜியா நகரிலும் நேற்று உயிரிழப்பு 48 ஆக உயர்ந்தது.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கோரோனாவில் 66 ஆயிரத்து 921 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகினர். ஆயிரத்து 485 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கோரோனாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 லட்சத்து 68 ஆயிரத்து 37 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவின் வோஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதாரப்பிரிவு நடத்திய ஆய்வில் செப்ரெம்பர் 29-ம் திகதிக்குள் அமெரிக்காவில் கோரோனாவால் உயிரிழப்பு 2 லட்சத்தை கடந்துவிடும் என எச்சரித்துள்ளது.

உலகளவில் 2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் கோரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 55 ஆயிரமாகவும், 90 ஆயிரத்து 188 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசலில் நேற்று புதிதாக 70 ஆயிரம் பேர் கோரோனாவில் பாதிக்கப்பட்டனர். ஆயிரத்து 554 பேர் உயிரிழந்தனர்.