உரிமைக்களையும் மண்ணையும் பாதுகாக்க எம்முடன் இணையுங்கள் – மணிவண்ணன் கோரிக்கை

0

எமது உரிமைகளையும் , மண்ணையும் பாதுகாக்க ஜனநாயக ரீதியாக போராடிவரும் எமக்கு அங்கீகாரம் தந்து, அவற்றைப் பாதுகாக்க எம்முடன் இணையுங்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

உரும்பிராய் பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர். இன்று கிழக்கு பறிபோய்க்கொண்டிருக்கிறது. வடக்கு பறிக்கப்பட தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணத்தில் நாவற்குழியில் தொடங் கப்பட்ட குடியேற்றம் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணத்தை ஆக்கிரமிக்க போகின்றது.

இவற்றை தடுத்து நிறுத்த எமக்கு அரசியல் தீர்வு வேண்டும். அதனூடகவே பறிக்கப்படும் உரிமைகள் , மண்ணை பாதுகாக்க முடியும். அதற்காகவே நாம் ஜனநாயக ரீதியில் போராடுகிறோம்.

வடக்கில் பெரும் முதலீடுகள் ஆரம்பிக்க கூடிய சாத்தியங்கள் உண்டு. வெளிநாட்டில் வாழும் எம் உறவுகளை இங்கே அழைத்து வந்து பெரும் முதலீடுகளை செய்ய முடியும் அதனூடாக இங்குள்ள இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும்.

கடந்த காலங்களில் உரிமையை பெற்று தருவதாகவும் அபிவிருத்தியை செய்வதாகவும் கூறி வாக்குகளைப் பெற்றவர்கள் எதனையும் செய்யவில்லை.

இந்த நிலையிலேயே எமக்கொரு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கேட்கிறோம். எந்த விட்டுக்கொடுப்பும் இன்றி சமரசமின்றி எமக்கான உரிமைகளை பெற போராடுவோம். அதற்காக எமக்கு அங்கீகாரம் தாருங்கள் – என்றார்.