“எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள், உரிமையையும் பெறுவோம் அபிவிருத்தியையும் செய்வோம்” – மல்லாகத்தில் சுகாஷ் வலியுறுத்து

0

எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் வழங்கினால், உரிமையையும் பெறுவோம், அபிவிருத்தியையும் செய்வோம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் வலியுறுத்தினார்.

மல்லாகத்தில் நேற்று இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும், திட்டமிட்டு புலி நீக்கம் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழ் தேசியம் தமிழ் தேசியப் பரப்பிலிருந்து அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்தப் பொதுத் தேர்தலிலே நாம் முடிவு கட்டவேண்டும். அல்லது எம் இனத்துக்கு சிங்களம் முடிவுகட்டும்.

இன்று மக்களுக்குப் புரிந்துவிட்டது, தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிழை, இது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவாக்கிய கூட்டமைப்புக் கிடையாது, இது ரணில் விக்கிரமசிங்கவினுடைய கூட்டமைப்பு.

இப்போது கோத்தாபய ராஜபக்சவுடன் “டீல்” அடித்துவிட்டார். அடித்துச் சொல்கின்றேன், இந்தப் பொதுத் தேர்தலுக்குப் பின்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோத்தாபயவின் அமைச்சரவையில் அமைச்சர்களாவார்கள், சுமந்திரன் அமைச்சுப் பதவி ஏற்பார். இதைத் தடுக்கவேண்டுமென்றால், நீங்கள் சரியானதொரு முடிவுக்கு வரவேண்டும்.

மக்கள் இன்று சைக்கிளுக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பெரும் ஆபத்து எங்களுடைய மண்ணை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. எங்களுடைய மண்ணுக்கு பல அரசியல் கோரோனாக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். யானையிலே வந்திருக்கிறார், கலா அக்கா, கையைக் காட்டிக்கொண்டு வெள்ளையும் சொல்லையுமா வந்திருக்கிறார், சிங்கள மாப்பிளை அங்கஜன் இராமநாதனாம். வீணை வாசிக்கின்றார் டக்ளஸ் தேவானந்தா. இவர்கள் எல்லாம் யார்? சிங்களக் கட்சிகள்.

சிந்தித்துப் பாருங்கள், சிங்கள மக்கள் பெரும்பாண்மையாகவுள்ள காலியிலையோ, அம்பாந்தோட்டையிலோ, மாத்தறையிலோ, குருநாகல்லையோ, களுத்துறையிலோ, பொலன்னறுவையிலோ ஒரு தமிழ் கட்சியில் போட்டியிட்டு ஒரு சிங்களவன் வெற்றிபெற முடியுமா – சிங்கள மக்கள் வாக்களிப்பார்களா இல்லை. ஆனால் எங்களுடைய மண்ணில் மட்டும், தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆண்ட இந்த மண்ணில் “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று சொன்ன மண்ணில், சிங்களக் கட்சிகள் வாக்குகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

அன்பான மக்களே!, தேசியத் தலைவருடைய கொள்கையை ஜனநாயக வழியிலே கடைப்பிடிக்கின்ற எங்களுக்கு சாதியமும் கிடையாது, மதமும் கிடையாது, குலமும் கிடையாது, பிரதேசமும் கிடையாது. நாங்கள் தமிழர்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஐயாவினுடைய சொந்த மாவட்டமான திருகோணமலையில் தமிழர்கள் அன்று முதலாவதாக இருந்தோம். இன்று வேதனை இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

தன்னுடைய சொந்த மாவட்டத்தைப் பாதுகாக்கத் தெரியாத ஒரு தலைவர், இனத்துக்குத் தேவையா? வவுனியா பறிபோய்க் கொண்டிருக்கின்றது, மன்னார், முல்லைத்தீவு பறிபோய்க் கொண்டிருக்கின்றன.மிஞ்சியிருப்பவை யாழ்ப்பாணமும் கிளிநொச்சியும். இவற்றையும் இழக்கப் போகின்றோமா? விகாரைகள் வந்துகொண்டிருக்கின்றன. நாவற்குழிக்கு வந்துவிட்டது, மறுபக்கம் மாதகலுக்கு வந்துவிட்டது – என்றார்.