எமது பிரதிநிதிகள் எமக்கு பொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை

0

பொதுத் தேர்தல் 2020 – ‘எமது பிரதிநிதிகள் எமக்கு பொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட தவறுகளை சுட்டிக்காட்டி தம்மை மாற்றாக முன்வைக்கும் இரண்டு அணிகள் பிரதானமாக எம்முன் உண்டு. ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இரண்டாவது தமிழ் தேசிய மக்கள் கூட்டணி. வெறுமனே விமர்சனங்கள் மூலமாக மாற்றரசியல் கட்டியமைக்கப்பட முடியாது என நாம் கருதுகிறோம். மாற்று அரசியல் அவசியமானது, ஆனால் அதன் உள்ளடக்கம் போதுமானளவு தெளிவாக பேசப்படவில்லை என்றே நாம் கருதுகிறோம் என்றும் அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையத்தின் இணைப்பேச்சாளர்கள் அருட்பணி வீ. யோகேஸ்வரன், கலாநிதி. குமராரவடிவேல் குருபரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மீண்டும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலை தமிழ் மக்கள் எதிர்கொள்கின்றனர். போர் நிறைவடைந்ததன் பின்னரான மூன்றாவது பொதுத் தேர்தல் இது.
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பின்வரும் மூன்று விடயங்களுக்காக முக்கியமானதாகிறது:

  1. தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வேணவாக்களை, நிலைப்பாடுகளை, தேவைகளை இலங்கைக்குள்ளும் சர்வதேசத்திலும் எடுத்துரைத்தல். குறிப்பாக அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறலை சாத்தியப்படுத்துவதற்கான செயன்முறைகளில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கைக்குள்ளும் சர்வதேசத்திலும் செயற்படுதல்.
  2. தமிழ் மக்களின் சாத்வீக அற வழிப் போராட்டங்களுக்கு தலைமை வழங்கலும் திட்டமிட்ட தொடர்ந்தேர்ச்சியான மக்கள் அணிதிரள்வு மூலமாக மாற்றங்களை சாத்தியமாக்கல்
  3. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நாளாந்த மற்றும் நீண்ட கால பொருளாதார, சமூக பிரச்சனைகளிற்கு இலங்கையின் அரச கட்டமைப்பிற்குள்ளும் அதற்கு வெளியிலும் தீர்வுகளை காணுதலும் அதற்கான சமூக முயற்சிகளுக்கு தலைமைத்துவம் வழங்குதலும்.

மேற்சொன்னவற்றில் எமது பார்வையில் எம்மை பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள் ஆற்றிய பங்கு தொடர்பில் பின்வருமாறு மதிப்பிடுகிறோம்.

முதலாவது விடயம் தொடர்பில்: தமிழ் பிரதிநிதிகளுக்கு இவ்விடயம் தொடர்பில் சுயாதீனமான சிந்தனையோ வேலைத்திட்டமோ இருந்ததாக தெரியவில்லை. யாருடைய நலன்களை இவர்கள் பிரதிநித்துவப்படுத்துகிறார்கள் என மக்கள் கேட்கும் அளவிற்கு எமது பிரதிநிதிகளின் செயற்பாடுகள் இருந்திருக்கின்றது. அரசியல் தீர்வு தொடர்பில் தான்தோன்றித்தனமான நிலைப்பாடுகள், மக்களிடம் தேர்தலின் போது பெறப்பட்ட ஆணைக்கு முரணான நிலைப்பாடுகள் என பல்வேறு தவறுகள் நடந்தேறியுள்ளன. பொறுப்புக் கூறலை ஒரு பண்டமாற்றுப் பொருளாக பாவித்து சர்வதேச விசாரணைக்கான தமிழரின் நிலைப்பாட்டில் தொய்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது விடயம் தொடர்பில்: மக்கள் போராட்டங்களை தமக்கெதிரான போராட்டங்களாக கருதும் அளவிற்கு இங்கு நிலமை மோசமாக உள்ளது. காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் நீதிக்கான தேடல் போன்ற விடயங்களில் அந்த மக்களின் போராட்டங்களை நலினப்படுத்தும் வகையில் எமது பிரதிநித்துவம் செயற்பட்டுள்ளது.

மூன்றாவது விடயம் தொடர்பில்: இது தொடர்பில் எமது இது வரையான பிரதிநித்துவத்திற்கு ஆர்வமோ சிந்தனையோ திட்டமோ இருந்ததாக தெரியவில்லை. கடந்த அரசால் முன்கொண்டுவரப்பட்ட கம்ரேலிய திட்டத்தின் கீழ் தமது தொகுதி நலன்களை பேணும் விதத்திலான கிள்ளித் தெளிப்புக்களையே எமது பிரதிநிதிகள் செய்தார்கள். செய்யப்பட்ட வேலைகள் எவையுமே தமிழ் மக்களின் கட்டமைக்கப்பட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நாடியதாக இருக்கவில்லை. வட மாகாண சபை அனுபவம் எமக்கு உணர்த்துமால் போல் இருக்கும் சட்டகத்திற்கு வெளியே சிந்தித்து செய்யப்பட வேண்டிய பொருளாதார சமூக மறுமலர்ச்சிக்கான திட்டம் எதுவேமே இல்லாத செயற்பாட்டு வெறுமையான அரசியலையே எமக்கு எமது பிரதிநிதிகள் எமக்கு தந்திருக்கிறார்கள்.

அப்படியாயின் என்ன செய்வது இந்த தேர்தலில்?

தேசியக் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கோ அவர்களின் முகவர்கள் அல்லது ஒட்டுக்குழுக்களுக்கோ தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பது எமது நிலைப்பாடு. மக்களின் அபிவிருத்தி சார் தேவைகளை உபகாரணப்படுத்தி அரசியல் செய்யும் சிங்கள பௌத்த அரசியலின் இந்தத் தமிழ் பேசும் முகவர்கள் தமிழ் தேசிய அரசியல் நீக்கத்தை செய்வதை தமது பிரதான இலக்ககாக கொண்டவர்கள். அவர்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில வேலை வாய்ப்புக்களையோ கிள்ளித் தெளிக்கும் வகையான செயற்திட்டங்களோ கிடைக்குமே அன்றி எமக்கு தேவையான பொருளாதார அபிவிருத்தியை தானும் அவர்களால் பெற்று தர முடியாது. தமது எஜமானர்கள் தருவதை வாங்கித் தருவதைத் தவிர சுயமாக பேசி புதிதாக ஒன்றையும் பெற்றுத் தர மாட்டார்கள்.
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இது வரை ஏக பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பிலான எமது மதிப்பீட்டை மேலே சொல்லியிருக்கிறோம். மீண்டும் இவர்கள் வாக்கு கேட்டு வருவதால் அவர்களுக்கு வாக்கு அளிப்பதாயின் மேலே குறிப்பிடப்பட்ட சறுக்கல்கள், தவறுகளை அவர்கள் சரி செய்யும் எண்ணத்தோடு உள்ளார்களா, அடுத்த ஐந்தாண்டுகளில் அவர்களின் மாற்றுத் திட்டமென்ன என்பதனை அவர்களின் தேர்தல் கால பரப்புரைகள் மற்றும் தேர்தல் அறிக்கையை வைத்து மக்கள் மதிப்பிட்டு தமது முடிவை எடுக்க வேண்டும் என நாம் கருதுகிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட தவறுகளை சுட்டிக்காட்டி தம்மை மாற்றாக முன்வைக்கும் இரண்டு அணிகள் பிரதானமாக எம்முன் உண்டு. ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டாவது தமிழ் தேசிய மக்கள் கூட்டணி. இவர்களுக்கு வாக்களிப்பதாயின் மேற்சொன்ன கட்சிகள் கூட்டமைப்பு தொடர்பில் முன்வைக்கும் விமர்சனங்களைத் தாண்டி அவர்கள் முன்வைக்கும் மாற்று யோசனைகள் எவை எனக் கணித்து அந்த மதிப்பீட்டின் பெயரில் தமது முடிவை தமிழ் மக்கள் எடுக்க வேண்டும் என நாம் கருதுகிறோம். வெறுமனே விமர்சனங்கள் மூலமாக மாற்றரசியல் கட்டியமைக்கப்பட முடியாது என நாம் கருதுகிறோம். மாற்று அரசியல் அவசியமானது, ஆனால் அதன் உள்ளடக்கம் போதுமானளவு தெளிவாக பேசப்படவில்லை என்றே நாம் கருதுகிறோம்.

இந்த இடத்தில் தமிழ் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும் ‘ஒற்றுமை’, ‘ஓரணியில் பேரம் பேச ஆணை’ போன்ற கோசங்களை சற்று அவதானமாக அணுக வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம். தமிழ் தேசிய பரப்பை ஒரு கட்சி மாத்திரம் பிரதிநித்துவப்படுத்துகின்ற சூழல் அந்தக் கட்சி மக்களுக்கு பொறுப்பு கூறாமல் எதேச்சாதிகாரமாக செயற்படுவதற்கு வாய்ப்பளிப்பதை நாம் அனுபவ ரீதியாக கடந்த 10 ஆண்டுகளில் கண்டுள்ளோம். எனவே தமிழ் தேசிய பரப்பில் பலகட்சி பிரதிநித்துவம் பொறுப்புக்கூறலை ஏதுப்படுத்த வாய்ப்பளிக்கலாம். மேலும் தெற்கில் அமையப் போகும் அரசு மிகப் பலமானதாக அமையும் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே அதனுடன் ஆசனங்களின் எண்ணிக்கையை காட்டி பேரம் பேசுவது சாத்தியமில்லை. தமிழ் பிரதிநிதித்துவ அரசியல் பரப்பை மக்கள் மயப்படுத்தும் வகையில், எமது பிரதிநிதிகள் எமக்கு பொறுப்புக் கூறுவதை சாத்தியமாக்கும் வண்ணம் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

(ஒப்பம்) (ஒப்பம்)
அருட்பணி வீ. யோகேஸ்வரன் கலாநிதி. குமராரவடிவேல் குருபரன்
இணைப் பேச்சாளர் இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் சிவில் சமூக அமையம்