தமிழர் தேச மக்கள் ஒன்றுபட்டு வீட்டுக்கே வாக்களியுங்கள் – மாவை சேனாதிராசா வேண்டுகோள்

0

“எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய விடுதலையைப் பெற்றிட தமிழ் மக்கள் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய இலங்கை அரசுடனும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடன் செயலாற்ற தொடர்ந்தும் சந்தர்ப்பத்தை கொடுங்கள் என அழைப்பு விடுக்கின்றோம். 2020 தேர்தலில் ஓகஸ்ட் 05ந்திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதன் வீட்டுச் சின்னத்திற்கு அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்து தமிழர் பலத்தை நிரூபியுங்கள். அதனால் பெருமளவு விருப்பு வாக்குகளினால் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்க வாக்களியுங்கள்”

இவ்வாறு தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான மாவை சோ.சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடா்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

70ஆண்டுகளிலும் தீர்க்கப்படாத தமிழ் இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ, அப்பிரச்சினை தீர்க்கப்படாததால் நடைபெற்ற போராட்டங்களினால், போரினால், இனக்கலவரங்களால் அழிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களை பற்றியோ உச்சரிக்காத அரசுக்கெதிராக மக்கள் அணிதிரள வேண்டும்.

தனது பதவி ஏற்பின் போதும், நாடாளுமன்றத்திலும் பௌத்த சிங்கள பெரும்பான்மைத்துவ மக்கள் தன்னை நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர் என ஜனாதிபதி கோத்தபாய அறிவித்துள்ளார்.

அத்துடன் புதிய அரசமைப்பொன்றை உருவாக்கப்போவதாகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைப் பலப்படுத்தப்போவதாகவும் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமென்றும் அவர் அறிவித்துள்ளார்.
அரசுத் துறையில் அமைச்சுச் செயலாளர்கள், அரசுத் திணைக்களங்களின் பொதுத்துறைகளில் முன்னாள் இராணுவத் தளபதிகளை இராணுவத்தினரை நிர்வாகப் பொறுப்புக்களில் நியமித்துள்ளார் ஜனாதிபதி.

இனப் பிரச்சினைக்குத் தீர்வற்ற, அதைப் பற்றியே உச்சரிக்காத ஒரு அரசமைப்பின் முன் தமிழ்த் தேச மக்களின் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் பெரும் சவாலாக அமையப் போகிறது.

நாட்டில் ஒரு சர்வாதிகார ஜனாதிபதி முறை, பௌத்த சிங்கள, பெரும்பாண்மைத்துவ ஆட்சிமுறை, அத்துடன் இராணுவ ஆதிக்க அரசு நிர்வாகத்துறை கொண்ட அரசிசமைப்பைத்தடுத்து நிறுத்திட நாட்டின் ஜனநாயக சக்திகள் தமிழ் மக்களுட்பட அணிதிரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் அவசியத்தை எமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.

2014ஆம் ஆண்டு ஜனநாயக சக்திகள் அணிதிரண்டு ஆட்சி மாற்றத்தையும் அரசமைப்பு மாற்றத்தையும் ஏற்படுத்த ஜனநாயக சக்திகள் திடசங்கற்பங் கொண்டது போல, ஒரு நிலைப்பாடு ஏற்பட்டால் மட்டுமே தமிழினத்தின் அரசியல் தீர்வுக்கும் சந்தர்ப்பம் உருவாகும். 2015ல் அது நடைபெற்றது.

போர் முடிவடைந்தது என்ற நிலையில் 2011ஆம் ஆண்டு ஐப்பசி 24ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையை அமெரிக்க இராஜாங்க அமைச்சு வாசிங்டனுக்கு அழைத்தது. அதன்படி மூன்று நாள்கள் இடம்பெற்ற பேச்சுக்களில் இலங்கையில் போரின் காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், இனப் படுகொலைகள் பற்றி ஆராயப்பட்டன. இறுதியில் போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரனைக்கே முன்னுரிமை கொடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அரசுக்கெதிராக ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரத் தீர்மானிக்கப்பட்டது.

2012 மார்ச்சில் 47நாடுகள் கொண்ட மனித உரிமைப் பேரவையில் 24வாக்குகளைப் பெற்று அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு, ருசியா, சீன நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. ஆனால் இலங்கையில் 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதே மனித உரிமைப் பேரவையில் 47 நாடுகளும் ஏகமனதாக இலங்கை இணை அனுசரனையுடன் 30/1, 34/1, 40/1 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானங்களாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத் தீர்மானங்களில் முக்கியமான வகிபாகங்களைக் கொண்டிருந்தது. அந்த தீர்மானங்களின் ஆதரவை நாம் பற்றி நிற்க வேண்டும். அதனை நாம் தொடர வேண்டும். நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பணி தொடரவேண்டும்.

2014ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தமிழரசுக் கட்சிக்கெதிராகச் சிங்களத் தீவிரவாதிகளால் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 2017ல் வழங்கப்பட்டது. அத் தீர்மானமாவது கனடிய சமஷ்டி நீதிமன்றத்தில் கியூபெக் மக்கள் வழக்கில் வழங்கப்பட்ட தீர்மானத்தை ஒத்திருந்தது. “தமிழரசுக் கட்சி கோரும் சமஷ்டித் தீர்வு நாட்டைப் பிளவுபடுத்தாது. உள்ளக சுயநிர்ணய உரிமையை கொண்டது” எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழினத்தின் தீர்வுத் திட்டங்களுக்கும் பலமானது.

கூட்டமைப்பின் சமஷ்டிக் கோரிக்கை நாட்டைப் பிளவுபடுத்தப்போவதாக மகிந்த ராஜபக்ச கூறுவராயின் இந்த நாட்டு அரசமைப்பையும் அதன் மூலம் உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் ஏற்க மறுக்கிறாரா? என்பதே கேள்வி.

இலங்கைப் நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் புதிய அரசமைப்பின் மூலம் ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு எனும் உருவாக்கம் முக்கியமானது. 2018ஆம் ஆண்டு இனப்பிரச்சனைத் தீர்வு உள்ளடங்கிய அரசியல் திட்டம் முன்னேற்றகரமானது. இதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இடைக்கால அறிக்கை முழுமையடைய சந்தர்ப்பங்கள் இருந்தன.

ஆனால் இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்ட “ஒருமித்த நாட்டிற்குள் தீர்வு என்பது நாட்டை பிளவுபடுத்தி விடும்” என்று கூறி ராஜபக்சக்களின் தூண்டுதலினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி காபந்து அரசை அமைத்துப் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டார். அதனால் 19ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் தடைப்பட்டது. இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பத்து நிபுணர் குழுவின் மேம்பட்ட அறிக்கையும் தடைப்பட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்கள் கணிசமான அளவு மீட்கப்பட்டாலும் மிகுதி விடுவிப்பு தடைப்பட்டுவிட்டது. விடுவிக்கப்பட்ட நிலங்களில் மக்கள் மீள்குடியமர வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. திருமலையில் சம்பூர் முழுமையாக விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்ந்துள்ளனர்.
கேப்பாப்புலவில் 1000 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. வலிகாமம் வடக்கில் 80வீத நிலங்கள் விடுவிக்கப்பட்டன. வடக்கு – கிழக்கில் இவ்வாறு மேலும் நிலங்கள் விடுவிக்கப்பட்டன. 2017, 18களில் 50ஆயிரம் செங்கல், சீமெந்து வீடுகள் ஒவ்வொன்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியில் நடைமுறைக்கு வந்தது.

2020 செப்டம்பர் வரை நாடாளுமன்றம் நீடித்திருந்தால் நிலவிடுவிப்பு உட்பட்ட பல விடயங்களில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும்

காங்கேசன்துறையில் துறைமுகம், சர்வதேச விமான நிலையம், மயிலிட்டியில், பருத்தித்துறையில் மின்பிடித் துறைமுகங்கள், சீமெந்துத் தொழிற்சாலை பிரதேசத்தில் தொழிற்பேட்டைகள், தொழில் நுட்ப தொழில் துறைகள் அமைக்க அமைச்சரவை தீர்மானத்துடன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இவைகள் நிறைவடையும் பொழுது வேலைவாய்ப்புக்கள், பொருளாதார வளம் பெருக வாய்ப்புக்கள் வந்திருக்கும்.

நாடாளுமன்றம் முழுக்காலமும் நடைபெற்றிருந்தால் இவைகள் பயன் பெருகியிருக்க முடியும். வடக்கு கிழக்கிற்கென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எட்டு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம் இரண்டு ஆண்டுத் திட்டங்கள் ஏற்கப்பட்டு வரவு செலவுத் திட்டத்திலும் 2018ல் 200மில்லியன் ரூபாய் ஆரம்ப நிதி அறிவிக்கப்பட்டது. அதன் மொத்த நிதித்திட்டம் 5000 பில்லியன் ரூபாய்களாகும். ஒவ்வொரு தொகுதியிலும் ஏனைய பல துறைகளின் திட்டங்களுடன் 300 முதல் 400 மில்லியன் ரூபாய் வரை கம்பெரலியா நிதி ஒதக்கீடும் வேலைகளும் இடம்பெற்றன.

எதிர்வரும் தேர்தலின் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஒன்றுடன் ஏற்படக்கூடிய ஜனநாயக சந்தர்ப்பம் தமிழ்த் தேச மக்கள் இன விடுதலைக்கான தீர்வுக்காண பேச்சு நடத்தும் நிலை ஏற்படுமானால் பேச்சு நடத்தவும் கூட்டமைப்பு தயார். அல்லது ஜனநாயக வழிகளில் மக்களை அணிதிரட்டி போராட்ட இயக்கத்தை முன்னெடுக்கவும் சர்வதேசத்துடன் புதிய அணுகல் முறைகளில் செயல்படவும் நாம் திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.

எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய விடுதலையைப் பெற்றிட தமிழ் மக்கள் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய இலங்கை அரசுடனும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடன் செயலாற்ற தொடர்ந்தும் சந்தர்ப்பத்தை கொடுங்கள் என அழைப்பு விடுக்கின்றோம்.

ஆகவே 2020 தேர்தலில் ஓகஸ்ட் 05ந்திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதன் வீட்டுச் சின்னத்திற்கு அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்து தமிழர் பலத்தை நிரூபியுங்கள். அதனால் பெருமளவு விருப்பு வாக்குகளினால் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்க வாக்களியுங்கள்.

மாவை சோ.சேனாதிராசா
தலைவர், த.அ.கட்சி, துணைத் தலைவர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு