ஈழத் தமிழர் அரசியலில் இளைஞர்களால் மாற்றம் வரும்

0

தமிழர் தாயகத்தின் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் உண்டானது. பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல் பொங்குதமிழ் உள்ளிட்டவைகளை மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள்.

மாணவர்களும், இளைஞர்களும் அரசியல் விழிப்புணர்வுடன் இருப்பது, தமிழ் அரசியலை கண்காணிப்பது, தவறு செய்யும்போது சுட்டிக்காட்டுவது, தேவைப்படும்போது கிளர்ந்தெழுவது, ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு அழகு. ஆனால், அண்மைக்காலமாக இளைஞர்கள் அரசியல் அற்றவர்களாக ஆகிவிட்டார்களோ என்ற அச்சம் வந்தது.

இந்த நிலையில்தான் நாளைமறுதினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு “மணியுடன் பேசுவோம்” என்ற நிகழ்வு இளைஞர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் நேற்றுமாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த அரசியல் கலந்துரையாடலில் இளைஞர் உள்பட வயது வித்தியாசமின்றி ஆயிரத்து 500 பேருக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர் என்று ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமி்ழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் அவரது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கம் கோரும் வகையில் இவ்வாறு ஆயிரக் கணக்கானோர் திரண்டனர். இளைஞர்களின் கேள்விகளுக்கு தனது நிலைப்பாட்டை மணிவண்ணன் விளக்கினார்.

நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறான அரசியல் கலந்துரையாடல்கள் நகரை அண்மித்ததாக மட்டுமல்லாமல் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்றிருக்கவேண்டும். அரசியல்வாதிகள் மக்களால் வழிநடத்தப்படும் நிலை அப்போதுதான் உருவாகும்.

இந்தக் கலந்துரையாடல்களுக்கு பல அரசியல்வாதிகள் பின்னடிப்பது வழமை. எனினும் மணிவண்ணன் போன்ற சிலர் முன்வருவார்கள். அவ்வாறானவர்கள் இளைஞர்களுடன் சேர்ந்து தமது அரசியல் பயணத்தைக் கொண்டு செல்வார்கள் என்பது உறுதி.

அரசியல்வாதிகள் இப்போது எந்த விவகாரம் பற்றிப் பேசினாலும், சமூக வலைதளங்களைப் பார்த்துவிட்டுப் பேசுவது புதிய அணுகுமுறையாக உள்ளது. எல்லாக் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்களையும், இளைஞர்களின் கருத்துகளையும் அறியாமல் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இது இளைஞர்களால் ஏற்பட்ட மாற்றம்.

ஆகவே ஈழத் தமிழர் அரசியலில் இளைஞர்களால் அரசியல் உள்பட அனைத்துத் துறையிலும் மாற்றத்துக்கான ஓர் அறிகுறி ஏற்பட்டுள்ளது என்பது நிதர்சனம்.