அங்கஜன் இராமநாதனுக்கு வரவேற்பளிப்பு

0

சிறிங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள அங்கஜன் இராமநாதனின் வரவேற்பு நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட இளைஞரணியின் ஏற்பாட்டில் இன்று காலை இந்த வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதன், சக வேட்பாளர்களுடன் ஊடக சந்திப்பையும் நடத்தினார்.
அதில் அவர் தெரிவித்ததாவது;

யாழ் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பலர் இது தேசிய கட்சி, இதற்கு வாக்களிக்க வேண்டாம் என பல்வேறு கருத்துக்களை கூறினார்கள். ஆனால் இந்த தேசிய கட்சி அதிகூடிய வாக்குபலத்தினால் இன்று வெற்றி பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் மக்களால் வரலாற்றில் முதல் தடவை நாடாளுமன்றம் செல்கிறார். உடுப்பிட்டி தொகுதியில் மாபெரும் வெற்றியை மக்கள் தந்துள்ளனர். அதி கூடிய விருப்பு வாக்குகளையும் மக்கள் எங்களுக்கே தந்துள்ளார்கள்.

இவை அனைத்தும் ஒரு செய்தியே. ஆனால் மக்கள் எதிர்பார்ப்பு இனி வரப்போகும் ஐந்து வருடத்தில் பிரதிநிதிகள் என்ன செய்யப்போகிறார்கள் என பாக்கிறார்கள். அந்த அடிப்படையிலேயே அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி, சுயதொழில் வாய்ப்பு, விவசாயம் ஆகிய துறைகளில் நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என்ற நம்பிக்கையோடு எங்களை தெரிவுசெய்துள்ளார்கள் என நம்புகிறேன். எங்களை தெரிவுசெய்த மக்கள் நோக்கம் உரிமையுடன் கலந்த அபிவிருத்தி பயணமே என நம்புகிறேன்.

என்னுடன் போட்டியிட்ட சக சுதந்திர கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. எனது அபிவிருத்தி பயணத்தில் அவரக்களும் கைகோர்ப்பார்கள். அவர்களுடன் இணைந்தே என் அபிவிருத்தி பயணம் அமையும்.

போட்டியிட்டு வென்ற ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனது பாராட்டுக்கள் அவர்களும் மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்.
சசிகலா அம்மாவிற்கு ஆதரவு குரலாக எம் கட்சியும் நாங்கள் இருப்போம். அவரது கண்ணீருக்கு ஆறுதலாக இருப்போம். அலாப்பி வெல்வோம் என எங்களைக் கூறியவர்கள் இன்று அலாப்பியே வென்றார்கள்.

இதுவரை காலமும் மக்களுக்காக எப்படி உழைத்தமோ அதை விட பல மடங்கு கஷ்டப்பட்டு உழைப்போம் – என்றார்.